சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கTamil Political news 

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க  திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க  திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது

திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது? அதிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க அவர்கள் என்ன செய்தார்கள்? இப்போதும் அதே ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது? என உண்மையான வருத்தத்தோடே கேட்டார். அவர் உயர்வகுப்பை சேர்ந்தவர் (ஆம் அதே தான் ஆனாலும் அவரது கேள்வியில் உண்மையான வேதனை இருந்தது  இன்று நண்பருடன் சிறு உரையாடல்

ரவா கிச்சடி சாப்பிட்டபடியே பேசினேன்.. சுருக்கமாக

“நீங்க இப்போ என்ன வேலை செய்கிறீர்கள்னு சொல்லமுடியுமா?” நான்

“சென்னையில் ஒரு கம்பெனியில் தலைமை எஞ்சினியர்” அவர் (இனி உரையாடலாக புரிந்துகொள்ளவும்)

“உங்களுடன் பணிபுரிவோர்….??.”

“பல தரப்பட்டவர்கள்.. பல இனத்தவர்..குலத்தவர்..”

“அவர்களோடு இணைந்து பணியாற்றுவது உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா?”

“இல்லவே இல்லை.. அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை வேறுபடுத்தி நான் பார்ப்பதில்லை. அவர்களோடு சகஜமாக பழகுகிறேன்.. அவ்வளவு ஏன்.. அவர்களோடு உணவை பகிர்ந்துகொள்ளுகிறேன்.. அவர்களது டிபன்பாக்ஸையே எடுத்து சாப்பிடுவேன்.. (வெஜிட்டேரியன் ஐட்டம்சாக இருந்தால் மட்டும்)”

“உங்களுக்கு எப்படி எல்லோரும் சமம் என்கிற உணர்வு வந்தது?”

“அது எனது கல்வியினால் வந்த மெச்சூரிட்டி”

“ஏன் வட மாநிலங்களில் கல்வி கற்றவர்களுக்கே கூட இந்த மெச்சூரிட்டி வரவில்லை?”

“…….”

“சரி அதை விடுங்கள். உங்களுக்கான தொழில்களை விட்டுவிட்டு நீங்கள் எஞ்சினியரிங் படிக்க விரும்பியதும்.. உங்களுடன் பணிபுரியும் அந்த ஒடுக்கப்பட்டோர் எஞ்சினியரிங் படித்து உங்களுக்கு சமமாக வந்திருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”

“இது சமுதாய வளர்ச்சியின் பரிணாம வெளிப்பாடு. சமூக வளர்ச்சியும் நாகரீகமும் வளர வளர நாங்களும் பிற துறைகளில் கால்பதித்து வென்றோம். அவர்களும் மெல்ல எல்லா துறைகளிலும் முன்னேறினர். இது கால மாற்றம். இதில் என்ன ஸ்பெஷல்?”

“இதே சமுதாய முன்னேற்றம்.. நாகரீக யுகம் வடக்கிலும் உள்ளதே? பிறகும் ஏன் ஒடுக்கப்பட்டவர்களால் அவர்கள் விரும்பிய கல்வியை படிக்க முடியவில்லை? தென்கோடியில் மட்டும் எப்படி அது சாத்தியமானது? அவர்களது வளர்ச்சி உங்களுக்கு எந்த உறுத்தலையும் தராத அளவுக்கு உங்களுக்கு மன முதிர்ச்சி வந்திருக்கிறது. ஆனால் உங்களை சார்ந்தவர்களுக்கு வடக்கில் உள்ளவர்களுக்கு ஏன் அந்த முதிர்ச்சி வரவில்லை?”

“இங்கு அடிப்படி கல்வியில் இருந்தே அந்த சமதர்மம் பாடமாக இருக்கிறது. வடக்கில் எப்படி என தெரியவில்லை”

“அது தான் திராவிடம் தந்த பெரும் மாற்றம்… ”

நான் முடித்துவிட்டேன்

உணவையும் உரையாடலையும்

அவர் என்னுடன் காரில் வரும்பொழுது நிறைய பேசினார். இப்போது அவருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. உற்சாகமாக இருந்தார். திராவிட இயக்கம் பற்றி நிறைய படிக்கப்போவதாக சொன்னார். ஒரே நேரத்தில் சுதந்திரம் கிடைத்தும் தென் மாநிலங்களில் மட்டும் இந்த மெச்சூரிட்டியும் சகிப்புத்தன்மையும் எல்லோருக்குள்ளும் வந்திருப்பதன் தாத்பர்யத்தை விரிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். திராவிடம் சத்தமில்லாமல் மிக பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொள்வதாக சொன்னார். இன்னும் இன்னும் நிறைய பேசினார்.. வழி நெடுக நீண்ட பயணத்தில்..

சந்தோஷமாக இருந்தது.

ஒரு சாதாரண உரையாடல் பத்து நிமிடத்துக்குள் இத்தனை மாற்றத்தை தரும் என நானே கூட நினைத்துப்பார்க்கவில்லை

ரவா கிச்சடி மிகவும் சக்திவாய்ந்தது !

Written by DonAdshok 

Related posts

Leave a Comment

%d bloggers like this: