இணையம் மூலம் வீடு வாங்குவதில் சில தடைகள்

ஒரு வேலை தேட, ஒரு நல்ல ஆடை வாங்க, பழைய பொருட்களை விற்க, புதிய விஷயங்களைக் கற்க என எல்லாவற்றுக்கும் இன்று இணையத்தையே நாடுகிறோம். ஆனால் வீடு, மனை வாங்குவதற்கு பெரும்பாலும் நேரடித் தரகு முறையே பரவலாகப் பின்பற்றப்பட்டது. ஆனால் இப்போது இணையத்தையும் ஒரு வழியாகக் கண்டடைந்திருக்கிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் இணையம் மூலம் வீடுகளைத் தேடுபவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துவருவதாகவும் கூகுள் கூறுகிறது. மேலும் 4.3 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழில் நடைபெற இணையத் தேடல் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை. யாகூ ஹோம்ஸ், ரெண்ட்.காம், மேஜிக் பிரிக்ஸ், 99ஏக்கர், ஆகிய தளங்கள் இணையத் தேடலில் முக்கியப் பங்கு வகிப்பதாக கூகுள் ஆய்வு தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் 15 நகரங்களில் 6 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பதிலளித்தவர்களில் 47 சதவீதமானோர் வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் பகுதி குறித்தும், பட்ஜெட் குறித்தும் அறிய இணையத் தேடலை நாடுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. 23 சதவீதமானோர் மறுவிற்பனை வீடுகளை/ மனைகளைத் தேட இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். 30 சதவீதமானோர் கட்டுமானத்தில் உள்ள வீடுகளைத் தேட இணையத் தேடல் மூலம் கண்டடைகிறார்கள்.

ஆனாலும் இணையம் மூலம் வீடு வாங்குவதில் சில தடைகள் உள்ளன. இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மை மிகவும் குறைவுதான். எனவே வீடு கட்டும் கட்டுநர்கள் மற்றும் இடைத்தரகர்களின் நம்பகத்தன்மையைச் சந்தேகத்துடனேயே பார்க்கும் நிலை இங்கு உள்ளது. இந்தப் போக்குதான் ஆன்லைன் மூலம் மனையோ வீடோ வாங்குவதற்கு முதல் தடையாகவும் உள்ளது. இதில் நம்பகத்தன்மை அம்சம் என்பது, நாம் வாங்கும் வீடு, மனை எல்லாவற்றையும் சட்டபூர்வமாக ஆராய்வதில்தான் உள்ளது.

உதாரணமாக, நீங்கள் ஒரு வீடு வாங்க விரும்புகிறீர்கள். அந்த வீட்டை நேரடியாகச் சென்று பார்த்து வாங்கும்போது உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும். ஆனால் ஆன்லைனில் வீடு வாங்கும்போது அந்த வெளிப்படைத்தன்மையைச் சொல்வது கொஞ்சம் கஷ்டமாகிவிடுகிறது.

நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, பெரும்பாலான வீட்டு மனைகள் மற்றும் சொத்துகள் யார் வசம் உள்ளன என்ற ஆவணங்கள் இங்கு கணினியமயமாக்கப்படவில்லை. அப்படி இருந்தால் ஆன்லைனிலேயே நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துத் தெளிந்துகொள்ளலாம். அந்த நிலை இல்லாத காரணத்தால் நீங்கள் ஆன்லைனில் சொத்துகள் வாங்கும்போதுகூட எல்லாவற்றுக்கும் நேரடியாகச் சென்று பார்ப்பது தவிர்க்க முடியாததாகவே உள்ளது