உணவு ரகசியம்

இவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள் 

இன்றுமுதல் விட்டொழியுங்கள் 

இவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்

இவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்  1. புகை பிடிப்பதை விட்டொழியுங்கள். உயிராற்றல் என்பது காற்றை நுரையீரலால் உள்ளிழுத்து உயிர்வளியைப் பிரித்தெடுக்கும் ஆற்றல்தான். புகையிழுப்பு அதற்கு நிகழ்த்தப்படும் தொடர் கேடு.

  1. மது குடிப்பதை விட்டொழியுங்கள். மூளைத்திறன், நீளாயுள், நரம்பியற்கை, தன்னம்பிக்கை, செல்வம் போன்றவற்றைச் சிறிது சிறிதாய் அழிக்கும் கொடிய பழக்கம் அது.

நீங்கள் இந்நேரம் என்னவாக ஆகியிருக்க வேண்டுமோ அவ்வாறு ஆக முடியாதபடி கெடுத்தவை மேற்சொன்ன இரண்டு பழக்கங்கள்தாம்.

  1. கெட்ட வார்த்தைகள் பேசுவதைத் தவிருங்கள். ஒரு சொல் என்பது உள்ளத்தின் படிவுகளிலிருந்து எழும் மொழிவடிவம். கசடும் கழிவுகளுமான அடிமனச் சேர்க்கை அத்தகைய சொற்களாக வெளிப்படுகிறது. தீச்சொற்களால் தீமைகள் குறித்து நமக்கிருக்க வேண்டிய நுண்ணுணர்வுகள் கெடும்.
  2. கெட்ட வார்த்தைகள் பேசுவதைவிடவும் கொடிய பழக்கம் பொய்சொல்வது. நெஞ்சாரப் பொய் சொல்லிப் பழகிவிட்டால் உங்கள் மனம் உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு காணும் தன்மையை இழந்துவிடும். இவ்வாழ்க்கையின் தலைமைச் செயலி மனம்தான். அது நம்புவதும் நிகழ்த்துவதும் துலக்கமாக இருக்க வேண்டும். அதனை உண்மையொளியால் தகதகக்கச் செய்யுங்கள்.

  3. யாரால் நேரம் கெடுகிறதோ, யாரால் நாம் பயன்படுத்தப்படுகிறோமோ, யாரால் நமது தன்னம்பிக்கை குலைக்கப்படுகிறதோ அவர்களுடைய நட்பினை அறவே துண்டித்துக்கொள்ளுங்கள். அவர்கள் உடனிருந்து நம்மை உதவாக்கரை ஆக்குவதில் குறியாக இருப்பவர்கள்.

  4. தன்னின்பப் பழக்கம் இருப்பின் முற்றாக விட்டொழியுங்கள். ஒருவரின் இயற்கையான உடல்தகுதியைக் களைப்புறச் செய்வது அப்பழக்கம். காதலற்ற வாழ்வு, காதலை அடைய முடியாத முடக்கம், இணையரை விழையாமை, இணைவாழ்வின் நீளாயுள் குறைதல், பொருட்படுத்தாதிருந்து வாய்ப்பிழத்தல், கூர்மதிக்கேடு, நோக்கமின்மை, ஊக்கமின்மை போன்ற பலவற்றுக்கும் காரணமாவது அப்பழக்கம். இளமையை மாய்க்கும் கோடரி.

  5. விடிகாலைத் தூக்கத்தை மறந்துவிடுங்கள். காலையில் வேலை இருக்கிறதோ இல்லையோ, ஆறு மணிக்குள் எழப் பழகுக. எல்லா இழப்புகளுக்கும் தூண்டுகோலாக இருப்பது தூக்க விருப்பம்தான். ஆழ்ந்த நிலையில் ஆறேழு மணி நேரத் தூக்கம் போதும். இரவில் பத்து முதல் ஐந்து மணிவரை / பதினொன்று முதல் ஆறுவரை – என் பரிந்துரை.

  6. எதனையும் தள்ளிப் போடாதீர்கள். இன்றைக்கு இதனைச் செய்ய வேண்டும் என்றால் அதனைச் செய்து முடித்துப் பழகுங்கள். எதனைத் தள்ளிப் போடுகிறீர்களோ அதனை விலக்குகிறீர்கள் என்றே பொருள். ஒன்றைச் செய்து முடித்துவிட்டால்தான் அடுத்த ஒன்றுக்கு முன்னேறுவீர்கள். ஒன்றிலேயே உழல்வதற்குப் பெயர்தான் தேக்கம். இதனால் பயனில்லையே என்று கழிக்காதீர். எதுவும் வீண்போகாது என்பதை நினைவிற்கொள்க.

  7. ஓரிடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது என்றால் அதனைத் தவிர்க்காதீர்கள். இருக்குமிடத்திலிருந்து தொடர்ந்து இடம்பெயர்ந்தபடியே இருப்பது பரந்த பட்டறிவைத் தரும். புதிய இடம், புதிய மக்கள் என்றால் வாய்ப்பைத் தவறவிடவே கூடாது. இருக்குமிடத்திலிருந்து கிளம்பிச் சென்றவர்கள் அடைந்த உயரத்தைப் பாருங்கள்.

  8. உங்கள் தோற்றத்தின்மீது கொண்டிருக்கும் பற்றின்மையை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் உடல் ‘ததக்கா புதக்கா’ என்றிருந்தால் அதனைச் சீர்செய்யுங்கள். நடை உடை மெய்ப்பாடுகளில் ஏதேனும் குறை என்றால் அதனைச் செப்பமாக்குங்கள். நன்கு உடற்பேணுக. நன்கு உடுத்துக.

இவற்றை மறவாமல் கடைப்பிடியுங்கள். ஆண்டின் இறுதியில் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் உருவாகியிருப்பதை உணர்வீர்கள். உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளாத வரையில் உங்களுக்குரிய எதுவும் மாறாது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

எழுதியவர்-கவிஞர் மகுடேசுவரன்
நன்றி Magudeswaran Govindaraja

Comments

0 comments

Related posts

கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்

admin

அன்னாசி பூ வின் நன்மை குறித்து பார்க்கலாம்

admin

சமைக்காமல் அப்படியே சாப்பிட வேண்டிய உணவுகள்

admin
%d bloggers like this: