Skip to toolbar
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்ன ?

ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்ன ?
#############################################
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக ஒருபுறத்தில் இராணுவ மட்டத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சீன ராணுவம் மற்றொரு புறத்தில் தொடர்ந்து இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது. கடந்த ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் எந்த இடத்தில் சீனர்களால் அமைக்கப்பட்ட தற்காலிக டெண்டுகளை அகற்றுவதில் ஈடுபட்டு அதிகாரிகள் உள்ளிட்ட 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர் இழந்தார்களோ, அதே இடத்தில் முன்பு இருந்ததைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் டெண்டுகளை சீன ராணுவம் தற்போது அமைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் இந்த செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய நிலையில் இனிமேலும் சீன ராணுவம் இந்தியப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கூறுவது, தன்னுடைய தலையை மணலில் புதைத்துக்கொண்டு, மற்றவர்கள் தன்னை பார்க்கவில்லை என்று கருதுகின்ற நெருப்புக்கோழியின் செயலுக்கு சமமாகும்.

இன்றைய சூழ்நிலையில் நாம் உடனடியாக சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்க இயலாத நிலையில் இருந்தாலும் கூட, இந்த நிகழ்வை இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரு அவமானமாக கருதி, இதை எதிர்காலத்தில் துடைத்தெறிய வேண்டியது கட்டாயம் என்ற அளவில் நாம் இந்த நிகழ்வை மக்களிடத்தில் குறிப்பாக நமது மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்.

எப்படி ஜப்பானியர்களால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வரலாற்றில் பதிவு செய்துகொண்டு, அந்த கொடுமைகளுக்கு பதில் தரும் வகையில் கொரிய மக்கள் வணிக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இன்றைக்கு நிமிர்ந்து நிற்கின்றனரோ அப்படி இந்திய தேசம் எதிர்காலத்தில் வணிக ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் வலிமை பெற்று விளங்க, சீனாவின் ஆக்கிரமிப்பை ஒரு தேசிய அவமானமாக மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

இன்றைக்கு Global Times – போன்ற சீன ஊடகங்கள் நாம் அவர்களுக்கு ஈடானவர்கள் அல்ல என்பதற்கு இரண்டு காரணங்களை முன் வைக்கின்றன.

• முதலாவது பொருளாதார ரீதியாக, வணிக ரீதியாக நாம் அவர்களை காட்டிலும் வெகுவாக பின்தங்கி இருக்கிறோம் என்பது.
• இரண்டாவது நாம் நம்முடைய இராணுவ வலிமைக்காக நம்பி இருக்கின்ற விமானங்கள், இதர ராணுவ தளவாடங்கள் அனைத்தும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், அதே நேரத்தில் தாங்கள் தங்களால் உற்பத்தி செய்யப்பட்ட விமானங்கள், ராணுவ தளவாடங்களை நம்பி இருப்பதாகவும், அவை இந்தியா நம்பியிருக்கும் இறக்குமதி செய்யப் பட்ட விமானங்கள், ராணுவ தளவாடங்களை விட சிறப்பானவை என்றும் கூறுகின்றன.

இந்த இரண்டு காரணங்களில் இருந்துதான் நாம் உரிய படிப்பினை பெறவேண்டும். மக்கள் தொகை என்பதை தங்கள் நாட்டுக்கு உள்ள சுமையாக நினைக்காமல், அதை எப்படி பெரும் சக்தியாக மாற்றி குறைந்த செலவில் நிறைந்த உற்பத்தியை சீன தேசம் பெருக்கியதோ அத்தகைய வழிமுறையை நாமும் பயன்படுத்தி நம்முடைய மக்கள் சக்தியை எவ்வாறு பொருளாதார சக்தியாக மாற்றுவது என்பதை பற்றிய திட்டங்கள் வகுக்க வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகும் விமானங்களை ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது அவமானத்துக்கு உரியது என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

சுய சிந்தனையை, கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மத்தியில் உருவாக்கும் வகையில் நமது கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்பிக்கின்ற அதே வேளையில், அறிவியல், கணிதம் உள்ளிட்ட இதர பாடங்களை அவரவர் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும். ஒருவன் தாய்மொழியில் கல்வி கற்கும் போதுதான் அவனது சுயசிந்தனை வளரும். அப்படி சுயசிந்தனை வளரும் போதுதான் கண்டுபிடிப்புகள் உருவாகும். ஆனால் நாமோ ஆங்கிலத்திலேயே அனைத்தையும் கற்க வேண்டுமென்று நம்முடைய மாணவர்களின் சுய சிந்தனையை மழுங்கடித்து விட்டோம். மனனம் செய்வது மட்டுமே கல்வியின் சிறப்பு என்றும், மனனம் செய்வதில் யார் வல்லவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள்தான் உயர் படிப்புக்கு உகந்தவர்கள் என்ற ஒரு தவறான கருத்தினை மாணவர்கள் மனதில் விதைத்து விட்டோம் அதன் காரணமாகத்தான் இன்றைக்கு மேலை நாடுகளுக்கு குறைந்த கூலிக்கு ஆட்களை அனுப்பும் பணியாளர் தேசமாக நாம் மாறி விட்டோம்.

எனவே இனிமேலும், பிரச்சனைகளுக்கு நேருவையும், இந்திரா காந்தியையும் குறை கூறி கொண்டிருக்காமல், ராகுல் காந்தியை நையாண்டி செய்வதை விட்டு விட்டு, சீன ராணுவத்தை விரட்டி விட்டோம், சீன ராணுவத்துக்கு மிகப் பெரிய சேதத்தை விளைவித்து விட்டோம் என்று வெற்று பேச்சில் சுகம் காணுவதை விடுத்து, என்ன நடந்தது என்பதை துணிவுடன் மக்களிடத்தில் எடுத்து சொல்லி, பிரச்சனைகளை எதிர்கொள்ள, சாதி, மத வேறுபாடுகளை கடந்து நாட்டு மக்களை ஓரணியில் திரட்ட வேண்டிய நேரம் இது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *