தமிழக ரியல் எஸ்டேட் 

காலிநிலம் வாங்குவதில் கவனம் வேண்டும்

காலிநிலம் வாங்குவதில் கவனம் வேண்டும்

குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலீட்டு அடிப்படையில் வீட்டுமனைகள் வாங்குவது நடுத்தர மக்களால் பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சொந்த வீட்டில் குடியிருந்தாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்னொரு ‘பிளாட்’ வாங்குவது, அல்லது தனி வீடு வாங்குவது என்று பல ‘ரிஸ்க்குகளை’ மத்திய தரமக்கள் குடும்ப நலன் கருதி எடுப்பது வழக்கம்.

‘இ.எம்.ஐ’ என்று சொல்லப்படும் மாதாந்திர தவணைகள் இல்லாத மத்திய தர குடும்பங்கள் இல்லை என்றே சொல்லலாம். பலவிதமான சமூக சூழ்நிலை அழுத்தங்கள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் முதலீட்டு அடிப்படையில் வாங்கப்படும் காலிநிலம், வீட்டுமனை மற்றும் தோட்டம் ஆகிய எதுவாக இருந்தாலும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பொருளாதார நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள். அவற்றில் சில முக்கியமான அம்சங்களை காணலாம்.

1. வாங்குவது காலிமனையாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சேமிப்பின் அடிப்படையில்தான் அது பற்றி முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும். சேமிப்பே இல்லாமல் முற்றிலும் கடன் தொகையை கொண்டே வாங்குவது அவ்வளவு சரியான முடிவு அல்ல.

2. இன்றைய காலகட்டத்தில் விவசாய நிலங்களில் செய்யப்படும் பாரம்பரிய விவசாயத்துக்கு உள்ள சாதகமான சூழலை மனதில் கொண்டு விவசாய நிலங்களை வாங்கி தக்க ஆட்களைக்கொண்டு விவசாயம் செய்யலாம் என்ற முடிவுக்கு ஒரு சிலர் வருவதுண்டு. இவ்விஷயத்தில் தெளிவாக முடிவு செய்துகொள்ள வேண்டும்.

3. விவசாய நிலபுலன்களை வாங்கும்போது அதன் ‘அப்ரூவல்’ பற்றிய விபரங்களை மட்டும் கவனிப்பது மட்டும் போதாது. 50 அல்லது 60 ஆண்டுகளுக்கான வில்லங்கமும், பட்டா விபரங்களையும் கவனித்துக்கொள்வது அவசியம். மேலும் பயிர் வகைகள் சாகுபடி செய்யப்பட்டிருந்தால் நேரடியாகவே அங்கு சென்று பார்ப்பதுதான் நல்லது. விவசாய குத்தகைதாரர் வசம் நிலம் இருக்கும்பட்சத்தில் அவரிடம் விசாரித்துக்கொள்ள வேண்டும். அதனால் நிலம் பற்றிய மற்ற தகவல்களையும் குத்தகை காலம் எப்போது முடிகிறது என்பதையும் அறிய இயலும்.

4. எவ்வகையான நிலத்தை நாம் வாங்குவதாக இருந்தாலும் ‘சர்வேயரை’ கொண்டு இடத்தின் மொத்த அளவுகளையும், நான்கு பக்கங்களிலும் உள்ள எல்லைகளின் உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ள வேன்டும். மேலும் இடத்திற்கு இருக்கும் நடைபாதைகள், பஞ்சாயத்து சாலைகள் பற்றியும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

5. காலிமனையாக இருந்தால் அங்குள்ள நிலத்தடி நீர் மட்டம் எவ்வாறு உள்ளது என்பதை அவசியம் கவனிக்க வேண்டியதாக இருக்கும். சம்பந்தப்பட்ட ஏரியாவிற்கு முன்னதாகவே சென்று அருகில் இருக்கும் கிணறுகள், குளங்கள் மற்ற ‘போர்வெல்’ அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் தண்ணீர் கிடைப்பது பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் பூமியில் இருக்கும் பாறைகள், மண்ணின் வண்டல் தன்மை, களிமண் தன்மை போன்ற விஷயங்களை அறிந்து கொண்டு வாங்கலாம்.

6. மனையை வாங்குவது என்ற முடிவை எடுத்த பின்னர் அனுபவமுள்ள கட்டுமான வல்லுனர் அல்லது நம்பகமான மேஸ்திரி ஆகியோரை இடத்திற்கு அழைத்து சென்று பார்வையிட வைப்பது நல்ல வழியாகும். அதன்வாயிலாக மண்ணின் தன்மைகள் பற்றியும், நீரின் தன்மைகள் பற்றியும் அஸ்திவார அமைப்புகள் எவ்வாறு அமைப்பது என்பதையும் அவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

7. எதிர்காலங்களில் நமது மனை அல்லது இடத்தை சுற்றிலும் எவ்வகையான மாற்றங்கள் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை கருத்தில் கொள்வது முக்கியமாகும். முக்கியமான சாலைக்கு அருகில் இருக்கும்பட்சத்தில் விரிவாக்கம் செய்வதால் நமக்கு உண்டாகும் பாதிப்புகள் பற்றியும், போக்குவரத்து மாற்றங்கள், மற்ற அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் அங்கு வருவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை பற்றியும் கச்சிதமாக கவனிப்பது அவசியம். அதில் குழப்பங்கள் இருந்தால் வல்லுனர்களது ஆலோசனையை நாடலாம்

  காலிநிலம் வாங்குவதில் கவனம் வேண்டும்

Browse House for sale in Chennai

Related posts

%d bloggers like this: