Skip to toolbar

கிரேஸி மோகன் நினைவலைகள்

கிரேஸி மோகன் நினைவலைகள் மோகனை எனக்கு முப்பதாண்டுகளுக்கு மேலாக அறிமுகம்  1980களின் இறுதியில் நாரதகான சபாவில் நடந்த ஒரு விழாவின்போது எங்கள் நாடகமும் அவரது நாடகமும் அடுத்தடுத்து நடந்தன
கோமல் சுவாமிநாதன் தான் அப்படியொரு வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்தித்தந்தார். ‘சுபமங்களா’ நாடகவிழாவையெல்லாம் கோமல் சுவாமிநாதன் நடத்தத் தொடங்கியிராத காலம் அது. அப்போதிருந்தே மோகனை நான் அறிவேன்
எனினும் நாடகங்கள் தொடர்பாக அவரோடு எதுவும் பேசியதுமில்லை; உரையாடியதுமில்லை 

கிரேஸி மோகன் கமலஹாசன்

‘அன்பே சிவம்” படத்தின் கதை தயாரிப்பில் பங்கெடுக்கிற போது எங்களுடைய சென்னை கலைக்குழுவின் வீதி நாடகங்களையெல்லாம் நிகழ்த்துகிற ஒரு ஏற்பாட்டை கமலஹாசன் தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் ஒழுங்கு செய்திருந்தார்
அப்போது எங்களது “பயணம்” , ” மாநகர்” என இரு நாடகங்களை அங்கே நிகழ்த்தினோம். மாதவன்,ஷோபனா,நாசர்,ராஜேஷ் போன்ற நடிகர்களும், சுந்தர் சி, மௌலி , போன்ற இயக்குனர்களும் மேலும் ஆர்தர் வில்சன்,மதன் என முப்பதுக்கு மேற்பட்ட திரைப்பிரபலங்கள் நாடகத்தைக்காண வந்திருந்தனர்  மோகனும் வந்திருந்தார் நாடகம் எல்லோருக்கும் ரொம்ப பிடித்துப்போயிற்று
மோகன் நாடகம் முடிந்ததும் என்னை வந்து கட்டிப்பிடித்துக்கொண்டார் நாடகத்தை மிகவும் சிலாகித்துப்பேசினார்
“உங்க நடிகர்கள்லாம் ரொம்பப்பிரமாதம்! கொஞ்சம் முயற்சி செஞ்சாங்கன்னா போதும் நாப்பது ரூபா சம்பளத்துக்குப்போயிடுவாங்க” என்றார்
அவர் நாற்பது ரூபாய் என்று சொன்னது ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 40,000 ரூ சம்பளத்தை. எங்களது நடிகர்களில் சிலர் சினிமாவுக்குப் போனார்களே தவிர யாரும் அப்படியெல்லாம் முயற்சி செய்து 40,000 ரூ சம்பளத்தையெல்லாம் பெறவில்லை என்பது வேறு விஷயம்..
இப்படி அவர் சொன்னது ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு
அதற்கப்புறம் என்னை எப்போது பார்த்தாலும் விகற்பமில்லாமல் எனக்கு ஏதேனும் ஆலோசனைகளையோ ‘டிப்ஸ்’களையோ அள்ளி வழங்கிக்கொண்டேயிருப்பார்
அவரது பெரும்பாலான நாடகங்கள் மேலோட்டமானவைதான்  நகைச்சுவையை அதாவது குறிப்பிட்ட சமூகப்பிரிவினரிடம் அதிகம் செலாவணியாகக்கூடிய நகைச்சுவையை சுழன்று வருபவைதான்
அவரது நாடகம் தொடர்பாக நான் அவரோடு பேசியது என்பது ‘தசாவதாரம்’ படத்தின் போது ஒரு காஃபி இடைவேளையில்தான்
கமலஹாசன் அலுவலகத்தில் காஃபி குடிப்பது என்பதே ஒரு ceremony அல்லது ‘ஒரு ritual ‘ எனலாம்.
கமலஹாசன் விசேடமாக வைத்துள்ள ஒரு காஃபிமேக்கரில் அவரே தயாரித்து தருவார்.
அந்த மேக்கரில் கொட்டைகளை எடுத்து ப் போட்டால் போதும் அதுவே வறுத்து அரைத்து டிக்காஷனாக்கித் தந்துவிடும்
இப்படி காஃபிகுடித்துக்கொண்டிருக்கும்போதுதான் அவருடைய முதல் நாடகமான ” கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” பற்றி அவரிடம் நான் பேசினேன்
என்னைப்பொறுத்தவரை அவருடைய படைப்பில் மிகவும் வித்தியாசமான நாடகமும் அதுதான்அந்நாடகம் எழுபதுகளின் இறுதியில் மேடையேறியது
அப்போது நான் திருவண்ணாமலையில் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவன் அந்நாடகத்தை பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை குமுதம் இதழில் அப்போது அந்நாடகம் தொடராக பிரசுரிக்கப்பட்டது; அதைப் படித்திருக்கிறேன்; அவ்வளவுதான்
அந்ந்த சமயத்தில் ‘Crazy Boys in Olympics” என்கிற ஒரு ஹாலிவுட் படம் வந்திருந்தது பட்டி தொட்டியெல்லாம் ஓடி பெரிய ஹிட் கொடுத்த நகைச்சுவைப் படம் அது  அந்த படத்தின் இன்ஸ்பிரேஷனில்தான் இந்நாடகத்தின் தலைப்பை அவர் யோசித்திருக்கமுடியும் என நினைக்கிறேன்
இசி ஆர் சாலையிலுள்ள பரபரப்பான போஷ் ஏரியாக்களில் ஒன்றாய் இருக்கிற இன்றைய பாலவாக்கம் அன்றைக்கு சென்னையின் வெளிப்பாவாடை; அதாவது நகரத்தின் கடைசி எல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகள் இருக்கும்
அதிக ஆள் நடமாட்டமில்லாததால் திருடர் பயம் அதிகம். இத்தகைய பிரசித்தி பெற்ற அந்தக் கால பாலவாக்கத்தில் வீடு கட்டி குடி போயிருக்கும் ஒரு நடுத்தர பிராமண குடும்பியின் வீட்டில் நான்கு திருடர்கள் வந்து புகுந்து கொள்வார்கள் வீட்டிலிருப்பவர்களையெல்லாம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிக்கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் கதை வளரும்

கே.பாலச்சந்தர் “ நாணல்

ஏற்கனவே கே.பாலச்சந்தர் “ நாணல்” என்று திரைப்படம் எடுத்திருந்தார்  அதே கதைக்களம் தான் இந்நாடகமும்
பாலச்சந்தரின் ‘நாணல்’ திரைப்படம் 1950-களில் வந்த ஹாலிவுட் திரைப்படமான “Desperate Hours” இன் அப்பட்டமான தழுவல்  ஒரு வகையில் கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் இந்த ஹாலிவுட் படத்தின் பேரன் என்று சொல்லலாம்
அந்நாடகத்தில் என்ன விசேஷமென்றால் அதில் வரும் திருடர்களின் பெயர்கள்.
ஒவ்வொருத்தருக்கும் பக்கிரி,கண்ணாயிரம், கபாலி போன்ற ஏதோ ஒரு பெயர் இருக்கும். சரியாக நினைவிலில்லை. ஆனால் ஒரு திருடனின் பெயர் மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது; அந்தத் திருடனின் பெயர் ‘ராமபத்ரன்’.
திருடனின் பெயர் ராமபத்ரனா? ஆமாம் பிணைக்கைதிகளாக்கப்பட்டிருக்கும் அந்த வீட்டிலுள்ளோருக்கும் இதே சந்தேகம் தான். ‘ராமபத்ரனை” ஒரு திருடனாகவே அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். என்னது ராமபத்ரனா? போப்பா நீ வேற காமெடி பண்ணிகிட்டு என்பார்கள்.
தனது பெயர் ராமபத்ரன் என்பதையும் தான் ஒரு திருடன் என்பதையும் நிரூபிக்க அவன் படாத பாடு படுவான். நாடகத்தின் தொடக்கமே ‘ராமபத்ரன்’ என்ற பெயரைச் சுற்றிச் சுழலும் நகைச்சுவையால் பொங்கி வழியும்.
ராமபத்ரன் என்ற பெயரில் ஒரு திருடனா? ஏன் , ஒரு திருடன் ராமபத்ரன் என்று பெயர் வைத்திருக்கக்கூடாதா? இந்தக்கேள்விகளை சிலர் சிரித்துவிட்டு எளிதில் கடந்திருக்ககூடும்.
அன்றைய பல தமிழ் சினிமாவின் கதாபாத்திரங்களுக்கு வைக்கப்படும் பெயர்களில் உள்ள ஸ்டீரியோடைப் பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்றியதாகவே நான்இதனைப் பார்த்தேன்.
ஓர் எளிய உதாரணம் கேங்க்ஸ்டர் கதையம்சம் கொண்ட பெரும்பாலான திரைப்படங்களில் வில்லியின் பெயர் ரோஸி என்றோ ஸ்டெல்லா என்றோ ஒரு கிறிஸ்தவப்பெயராகவே இருக்கும்.
நடுத்தரவர்க்கத்து வாழ்வியலைச் சித்தரிக்கும் குமாஸ்தாக்களின் கதைகளை மையங்கொண்ட படங்களில் ஆண்களை மயக்குகிற பெண்கள் எல்லாம் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகவே இருப்பார்.
வில்லன்கள் எல்லாம் சேஷாஜலம் என்றோ சிவபுண்ணியம் என்றோ இல்லையொரு சுந்தரவதனம் என்றோ பெயர் வைத்திருக்கமாட்டார்கள். ஜம்புலிங்கம், நாகலிங்கம் என்றே பெயர் வைத்திருப்பர்.
நமது சாதீய சமூகத்தில் புரையோடியுள்ள ஓர் ஆழமான பிரச்சினை, ஒரு குறிப்பிட்ட குணாம்சங்களை சாதி மத அடையாளங்களுக்குள் அடக்குவது  இதுதான் கல்சுரல் ஸ்டீரியோடைப் என்பது
இப்படிப்பட்ட ஒரு சூழலில் பிராமணர்கள் மத்தியிலே புழக்கத்திலுள்ள ‘ராமபத்ரன்’ எனும் பெயரை ஒரு திருடனுக்கு வைப்பது என்பது உண்மையிலேயே ஓர் அடியறுப்பு [subversion] வேலைதான். அப்போது அயோத்தி -ராமஜென்ம பூமி பிரச்சினையெல்லாம் மேலெழவில்லை என்பது வேறு விஷயம்.
நான் இப்படியெல்லாம் கிரேசி தீவ்ஸ் நாடகத்தை அவரிடத்தில் விவரிக்கிறபோது இதெல்லாம் நமக்கு தெரியாதுப்பா என ஓர்அப்பாவி போல நம்மைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
எல்லாச் சொற்களும் பொருள் குறித்தவைதான். சில நேரத்தில் சொற்கள் பொருளற்றதாகவும் போகக்கூடும். இதை உணர்ந்த அவர் சில நேரங்களில் சொற்களால் அம்மானை ஆடுவார். கத்தியால குத்திட்டான் என்பதை குத்தியால கத்திட்டான் என்பார். இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம்.
அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை  எப்போதாவது பார்க்கும் போது குசலம் விசாரித்துக்கொள்வதுதான்  அவருடைய நாடகச் செயல்பாடுகளுக்கும் எமது நாடகச்செயல்பாடுகளுக்கும் தர்க்கரீதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயன்றதுமில்லை  இருப்பினும் மோகனின் பிரிவை என்னால ஜீரணிக்க முடிய வில்லை.
உங்களை இழந்ததற்கு மிகவும் வருந்துகிறேன் மோகன்!
கிரேஸி மோகன் நினைவலைகள் by  Chandraseakaran 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *