கிரேஸி மோகன் நகைச்சுவை வசனங்கள்

கிரேஸி மோகன்

கிரேஸி மோகன் நகைச்சுவை வசனங்கள்

எல்லோரும் கிரேஸி மோகன் நகைச்சுவை வசனங்கள் களையே நினைவுகூர்கிறார்கள். உண்மையில் நகைச்சுவை வசனங்களுக்கு இணையாக உணர்ச்சிகரமான வசனங்களையும் எழுதக் கூடியவர் அவர். இன்னும் சொல்லப்போனால் கமலின் நகைச்சுவை/மசாலா படங்களில் எப்போதுமே உயிர்நாடியாக ஒரு சோகமோ, உணர்ச்சியோ இருக்கும்.

அபூர்வ சகோதரர்களில் இருந்து வசூல்ராஜா வரையில் அது உண்டு. அதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து அந்தப் படங்களை மக்கள் மனதில் ஆழமாக நிலைநிறுத்தியதில் கிரேஸி மோகனின் பங்கு மகத்தானது.

“சேதுபதிக்கு பொறந்தது ரெட்டை. அதுல ஒன்னு குட்டை,” என நாகேஷ் பேசும் வசனம்,

“என்னடா பாதிதான் கொண்டு வந்திருக்கீங்க. மீதி எங்க?” என அப்புவைப் பார்த்து நாகேஷ் கேட்கும்போது,

“இவ்ளோதான் சார் கிடைச்சுச்சு” என அடியாட்கள் சொல்லும் பதில் என இடம்பெற்ற அதே படத்தில்தான்

“திருக்குறள் கூட ரெண்டே அடிதான். என்னவிட குள்ளம். ஆனா எவ்ளோ விஷயம் இருக்கு!” போன்ற வலுவான வசனங்களும் இருக்கிறது.

அவ்வை ஷண்முகி படத்தை ஆயிரம் முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் அதில் நாம் கவனிக்கத்தவறிய ஒரு புதிய நகைச்சுவை கிடைக்கும்.

“பேரு என்ன?  கிரேஸி மோகன்
பாபாபு..
ஓ..பாபுவா? நியூமராலஜிக்காக பாபாபுனு வச்சிருக்கியா?”
போன்ற வசனங்கள் நிறைந்த அதே படத்தில் தான், அவ்வை சண்முகியைப் பார்த்து “காளைமாடு. எங்க அப்பா வாசம் எனக்கு தெரியாதா?” என அந்த குழந்தை சொல்லும் வசனமும் இருக்கும். இன்றும் அதைக் கேட்கும்போது எனக்கு கண்ணீர் துளிர்க்கும்.

வசூல்ராஜாவில் நாகேஷ் சொல்வார், “அதெப்படிடா.. என்ன அடிக்கல.. கொல்லல…ஆனா உசிர மட்டும் உருவி எடுத்துட்ட” என்று. அதேபோல் “அய்யோ அவங்க அம்மா கேட்டா என்ன சொல்லுவேன்… நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேனே…” என ஜாகீருக்காக கமல் பேசும் வசனங்கள். இதேபோல் பம்மல்.கே.சம்பந்தம், தெனாலி படங்களிலும் பல வசனங்கள் இருக்கும்.

ஒரு முழு நகைச்சுவைப் படம் காலம் கடந்தும் மக்களால் ரசிக்கப்படுவதற்கு அதில் ஆழமான emotional content இருக்க வேண்டியது அவசியம். அதை குறைந்த காட்சிகளில் மனதில் பதிய வைக்க வலுவான வசனங்கள் அத்தியாவசியம். அதைச் செய்வதில் கிரேஸி மோகன் வல்லுனர்.

சதிலீலாவதி படம் பார்த்தபோது எனக்கு மிகவும் சிறிய வயது பல் லேசாக ஆடிக்கொண்டிருந்தது. படத்தைத் தியேட்டரில் பார்த்து சிரித்ததில் பாதி படத்தின்போது பல் விழுந்துவிட்டது!!! சிரித்தால் நோயே வராது என்பார்கள். 66 வயதிலேயே ஏன் கிரேஸி மோகன் இறந்தார் எனப் புரியவில்லை. சாவு அப்படித்தான். அது ஒரு சனியன். கண்மண் தெரியாத நாய்க்குட்டியைப் போல கண்டதையும் கண்டநேரத்தில் பிய்த்துப்போடும். இன்று கிரேஸி மோகனைப் பிய்த்துப் போட்டிருக்கிறது. ஆனால் எழுத்தாளர்கள் பாக்கியசாலிகள். அதிலும் திரை எழுத்தாளர்கள் அதீத பாக்கியசாலிகள். எந்தக் கொம்பன் நினைத்தாலும் டிவியில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அவர்களின் எழுத்துகளைப் பிய்த்துப் போட முடியாது. காலாகாலத்துக்கும் அதில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

-டான் அசோக்
ஜூன் 10, 2019