சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி

சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி
சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி

சென்னை மாநகரில் அனுமதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள் போன்ற நில உபயோக விவரங்கள் அனைத்தும் சி.எம்.டி.ஏ அமைப்பின் இணைய தளத்தில் (http://www.cmdachennai.gov.in) நில அமைவு தகவல் முறையின் (ஜியாகிரபிகல் இன்பர்மேஷன் சிஸ்டம்) அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள் ஆகிய தகவல்களையும் இந்த இணைய தளத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம்.சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி

குறிப்பிட்ட பகுதிகளில் எந்த வகையான கட்டுமானங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்ற விவரத்தையும் இணைய தளத்தின் உதவியோடு தெளிவாக தெரிந்துகொள்ளலாம். எனவே குடியிருப்புக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் வீட்டு மனை விற்பனை செய்வது முற்றிலும் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருநகர பகுதிகள்

சி.எம்.டி.ஏ அமைப்பானது சென்னை பெருநகரப் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதியை வழங்கிவருகிறது. சென்னை பெருநகரப் பகுதி என்பது சென்னை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 214 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சி.எம்.டி.ஏ–வின் இணைய தளத்தில் ஏற்கனவே மாநகரப் பகுதியில் நில உபயோகங்கள் பற்றிய வரைபடம் இணைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மேலதிக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு அந்த தளத்தின் வேறு பிரிவுகளில் தேட வேண்டியிருந்தது. தற்போது நில அமைவு தகவல் முறையின் அடிப்படையில் அனைத்து தகவல்களையும் எளிதாக பெற முடிகிறது. சர்வே எண்ணைக் குறிப்பிட்டாலே அந்த பகுதி முழுமையான குடியிருப்பு பகுதியா அல்லது நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான பகுதியா என்ற விவரத்தை தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் அந்த பகுதியில் எந்த வகையான கட்டுமானம் அனுமதிக்கப்படுகிறது என்ற விவரத்தையும் அறிந்துகொள்ளலாம்.

அனுமதிக்கப்படாத பகுதிகள்

சென்னை மாநகரப் பகுதிக்கு உட்பட்ட சில இடங்கள் கடற்கரையோர ஒழுங்குமுறை மண்டலம்,  செங்குன்றம் நீர்ப்பிடிப்பு பகுதி, இந்திய வான்வழிப் படை, சுற்றுவழி சாலை, பசுமை வளையம், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி, தொல்லியல் துறை முதலிய அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த பகுதிகளில் குடியிருப்புகள் அனுமதிக்கப்படுவதில்லை.

தொல்லியல் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டிடங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் புராதன சின்னங்களைச் சுற்றி 200 முதல் 300 மீட்டர் சுற்றளவுக்குள் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளும் முழுமையான ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை.

சி.எம்.டி.ஏ இணைய தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம் நிலத்தின் உபயோகம் பற்றிய உறுதியான தகவலை பெறமுடியும். இந்த வசதியால் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் நம்பகமான தகவலை பெற்று வீட்டுமனைகளில் முதலீடு செய்ய முடியும்சி.எம்.டி.ஏ. இணைய தளத்தில் புதிய வசதி

 

Publish Ads free

மறுமொழி இடவும்