சுவர்களில் விரிசல்கள் ஏற்பட காரணங்கள்

கட்டிட அமைப்புகள் சரியான திட்டமிடலுடன் கட்டப்பட்டிருந்தாலும் குறைபாடுகள் அவற்றில் உண்டாவது பொதுவான ஒன்று. கட்டிடம் எதுவாக இருந்தாலும் அதில் வரக்கூடிய விரிசலை கட்டுமான பொறியாளர்கள் தொழில்நுட்ப குறைபாடாகத்தான் பார்க்கிறார்கள். தக்க தொழில்நுட்ப ஆலோசனைகளுடன் கட்டமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் பிற வகை கட்டிடங்களில் கூட அவ்வப்போது விரிசல் என்ற சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது.

தற்போதைய அவசரமான காலகட்டத்தில் எல்லோரும் சரியான கட்டுமான தொழில்நுட்ப ஆலோசனை பெற்ற பின்புதான் வீடு கட்டும் வேலையை ஆரம்பிக்கிறார்கள் என்பது நிச்சயமில்லை. வேலையாட்களின் அவசர மனநிலை, வேலை பற்றிய முன் அனுபவம் இல்லாதது, தொழில்நுட்ப அறிவு பெறாதது ஆகிய மனித குறைபாடுகளும் கட்டிட விரிசலுக்கு காரணமாக உள்ளன. கட்டிட விரிசல்கள் வருவதற்கு என்ன காரணம்..? என்பது பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

1. விரிசலுக்கு சுற்றுப்புற வெப்ப நிலை மாற்றமும் ஒரு காரணமாக உள்ளது. வெயில் காலம், மழை அல்லது பனி மூட்டம் இருக்கும் காலங்களில் அமைக்கப்படும் சுவர்கள், கான்கிரீட் அமைப்புகளை கூடுதலாக கவனிக்க வேன்டும். காரணம் அவற்றின் ‘செட்’ ஆகும் தன்மை அதற்கு தகுந்த மாதிரி வேறுபடும்.

2. சுவர்கள் கட்டமைக்கப்பட்ட பிறகு அவை இறுகுவதற்கு ஊற்றப்படும் தண்ணீர் உப்புத்தன்மை இன்றி இருப்பது அவசியம். நீரில் கலந்துள்ள உப்பு சிமெண்டுடன் வேதிவினைக்கு உள்ளாகி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சுத்தமான தண்ணீரை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.

3. சுவர்களுக்கு தண்ணீர் போதுமான அளவு ஊற்றியிருக்க வேண்டும். தண்ணீர் அளவு குறைவாகிவிட்டாலும் விரிசல் ஏற்பட்டுவிடும். வேலையாட்கள் தவிர மற்றவர்களும் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

4. சிமெண்ட் மணல் கலவையானது நீர் விடுவதற்கு முன்பும், நீர் விட்ட பின்பும் நன்றாக கலக்கப்பட வேண்டும். சிமெண்டு மணல் கலவையானது சரியாக இருக்க வேண்டும்.

5. சிமெண்டில் சரியான கிரேடை பயன்படுத்தாமல் விட்டால் விரிசல்கள் வரும். சிமெண்டு விலையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் நல்ல கிரேடு சிமெண்டா.? என்பதையும் கருத்தில் கொள்வது முக்கியம்.

6. பழைய கட்டிடத்தோடு புதிய கட்டிடத்தை இணைக்கும்போது தகுந்த ‘பாண்டிங் கெமிக்கல்’ உதவியுடன் இணைக்க வேண்டும். சாதாரண சிமெண்டு வகை பூச்சுகள் அதற்கு பொருந்தாது.

7.கட்டிடத்தில் உண்டாகும் ‘பில்டிங் ஜாயிண்ட் எக்ஸ்பான்ஸன்’ காரணமாகவும் விரிசல் வரலாம். அவற்றை உடனே தக்க ‘கெமிக்கல்’ கலவை கொண்டு சரி செய்து விட வேண்டும்.

8. கான்கிரீட் கம்பிகள் நீர்க்கசிவு பிரச்சினையால் துரு பிடிப்பதால் அதனாலும் விரிசல்கள் வரலாம். கம்பிகள் கட்டும்போதே அதற்கான ‘ரஸ்ட் புரூப்’ முறைகளை கையாள வேண்டும்.

9. வெளிப்புற சுவர்கள் மற்றும் மேல்கூரைகளுக்கு ‘வாட்டர் புரூப்’ பெயிண்ட் அடிக்காமல் விட்டாலும் விரிசல்கள் வரலாம். தக்க விதத்தில் அதை கையாண்டால் நீர்க்கசிவால் விரிசல்கள் வருவது தடுக்கப்படும்