சென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்

சென்னை நகரம்

சென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்

சென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம் பட்டணம் போனால் கெட்டு விடுவாய் என்று ஊரில் சொன்னார்கள்,
கெட்டும் பட்டணம் போ என்று கண்ணதாசன் சொல்லி இருந்தார்.. கெடாமலே, பட்டணந்தான் போக வேண்டும் என்று பிடிவாதமாக திருச்சியில் பள்ளிக்கூடம் சேர்ந்தேன்..

அதேபோல் சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு மதுரையில் இடம் கிடைத்தாலும் ,மனம் ஏனோ சென்னையை சுற்றியே கனவு கண்டது.. எப்படியாவது சென்னைக்கு சென்று விட வேண்டும் என்ற பேரவா கொண்டிருந்தேன்.. சென்னையில் கல்லூரி படிக்க வேண்டும் என்ற ஆசை ஏதோ தீயாய் எரிந்தது ..மதுரையில் சேர்ந்த வாரத்திற்குள்ளாகவே சென்னைக்கு மாறுதல் கிடைத்துவிட்டது.. 1994 ஆகஸ்டில் சென்னை வந்தேன்.. 17வயது அன்று முதல் இன்று வரை சென்னையின் மீதான ஈர்ப்பு, பிரமிப்பு குறையவில்லை..

முதன்முதலில் வேளச்சேரி குருநானக் கல்லூரி அருகில் கல்யாணசுந்தரம் அண்ணன் அறையில் தங்கினேன் ,பிறகு வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் வேலப்பன்சாவடி முகப்பேர் என பல இடங்களில் தங்கினேன்.. ஆழ்வார்திருநகர் வளசரவாக்கம் தான் அதிகபட்சமாக இருந்ததாகும்.. சென்னையை அணுஅணுவாக சுற்றிப் பார்த்திருக்கிறேன் தெருத்தெருவாக அலைந்து திரிந்து ரசித்து பார்த்திருக்கிறேன்.. பல நாட்கள் நடந்து சென்றுள்ளேன் சைக்கிளில் ரெக்கை கட்டி பறந்துள்ளேன்.. பல்லவன் பேருந்து பிரதான துணைவன்.. பாதம் படாத ரூட் இல்லை எனும் அளவுக்கு எல்லா திசைகளிலும் பறந்திருக்கிறேன் ..
அதேபோல் இங்கேயே அடையாறு காவல் உதவி ஆணையராக ,பூக்கடை துணை ஆணையராக பணிபுரிந்தேன்.. அதேபோல் சென்னையை சுற்றி பணிபுரியும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது செங்கல்பட்டு டிஎஸ்பி அரக்கோணம் டிஎஸ்பி திருவள்ளூர் கூடுதல் எஸ்பி பல நிலையில் பணிபுரிந்ததால் அப்பொழுதும் சென்னைக்கு அடிக்கடி வரக்கூடிய வாய்ப்பு கிடைத்தது..

சென்னையை கூர்ந்து நோக்கினால் இந்த நகரம் பலவிதமான பாடங்களை கற்றுத்தரும் ..
தமிழ் ஒரு இணைப்பு மொழியாகவே இருக்கிறதே தவிர இனத்தின் மொழியாக இல்லை.. இங்கு எல்லாவித மொழி பேசும் மக்களும், எல்லா இன மக்களும், எவ்வித பாகுபாடுமின்றி முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்..
அதேபோல் எல்லா தொழிலும் இங்கு சிறப்புற்று விளங்கும்.. ஜவுளி தொழில், கணினி ,மென்பொருள்,சினிமா, இலக்கியம், எழுத்து ,பதிப்பு, மருத்துவம் ,கல்வி, ஆன்மீகம் சார்ந்த சிறு குறு தொழில்கள், ,கட்டிட தொழில், கட்டிடங்கள் சார்ந்த உபரி தொழில்கள், அரசியலின் உச்சம் சென்னை என்றுதான் சொல்லவேண்டும்.
சாமானியர்கள் சென்னைக்கு வந்த பிறகுதான், தங்களுடைய திறமைக்குரிய அங்கீகாரத்தை, பொருளாதாரத்தை, உச்சபட்ச புகழை பெற்றிருக்கிறார்கள்..

சென்னையின் வரலாறு தமிழ் நாட்டின் வரலாற்று மரபிலிருந்து இருந்து வேறுபட்டதாகும்.
இந்த நகரம் காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை போன்று மன்னர்களால் கட்டமைக்கப்பட்டது அல்ல, இங்கு எந்த ராஜ்யம் ஆட்சி செய்தது இல்லை.
எந்த சக்கரவர்த்தியும் கோட்டை கட்டவில்லை.
இது சாமானிய மக்களின் நகரம் .மீனவர்கள், நெசவாளிகள், மூட்டை தூக்கும் தொழிலாளிகள் தச்சர்கள், மொத்த கொள்முதல் வணிகர்கள்,நடைபாதை வியாபாரிகள் ஆகியோரால் உருப்பெற்று ஆங்கிலேய வணிகர்களால் கட்டமைக்கப் பட்டதாகும்..

வரலாற்று பதிவு என்று பார்த்தால் தொல்காப்பியத்தில் கூறப்படும் தமிழ் கூறும் நல்லுலகம் என்பதில் 12 சிறு நாடுகள் குறிப்பிடப்படுகிறது. அதிலுள்ள அருவா நாடு என்பதில்தான் காஞ்சிபுரம், சென்ன குப்பம் போன்றவை வருகிறது. அதேபோல் 24 கோட்டங்களில் புழல் கோட்டம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.1647 ஆவணம் ஒன்றில் தொண்டை மண்டலத்து புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டு சென்னப்பட்டினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

சக்கரவர்த்திகள் சரித்திரம் இல்லையே தவிர சாமானியர்கள் சரித்திரம் தெருவெங்கும் இறைந்து கிடக்கிறது..
தியாகராய நகரை எடுத்துக்கொண்டால் திராவிட இயக்க தலைவர்களின் நினைவுகளை சுமந்த நகரமாக தான் உள்ளது. தியாகராயநகர் என்பதே திராவிட இயக்க நிறுவனர்களில் மும்மூர்த்திகளில் முதல்வராக இருந்த பிட்டி தியாகராய செட்டியாரின் நினைவாக அழைக்கப்படுவதாகும் .தூய்மையான வெள்ளை வேட்டி சட்டை அணிந்ததால் வெள்ளுடை வேந்தர் என்று போற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி தலைவராக இருந்தபோது இங்கிலாந்து ஜார்ஜ் மன்னரை வரவேற்க சம்பிரதாய உடையை அணியுமாறு சொன்னதற்கு, பிடிவாதமாக மறுத்து விட்டு தன்னுடைய வேட்டி சட்டையை அனுமதித்தால் நான் வருகிறேன், இல்லாவிடில் அத்தகைய வரவேற்பில் பங்கேற்க விருப்பமில்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டார். விஷயம் ஜார்ஜ் மன்னர் அவருக்கு சென்று, அவருடைய பாரம்பரிய உடையிலேயே இருக்கட்டும் என்று சொன்ன பிறகுதான் வந்தார்.
அப்படிப்பட்ட வெள்ளுடை வேந்தர் நீதிக்கட்சித் தலைவராக இருந்தபோது சென்னை மாகாண முதல்வராக பதவி தேடி வந்த நிலையில் வேண்டாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டார் அதன் பிறகுதான் பனகல் அரசர் பதவி ஏற்றார். முதல்வர் பதவியை துறந்த தியாகராஜரின் நினைவாகத்தான் பனகல் அரசர் 1922 இந்தப் பகுதிக்கு தியாகராய நகர் என்று தியாகத்தை நினைவு கூறும் விதமாக பெயர் சூட்டினார். 1919 மாநகராட்சிகள் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் பிட்டி தியாகராயர்.அவருடைய நினைவைப் போற்றும் விதமாக 1931 இல் அப்போதைய கவர்னர் ஜார்ஜ் பிரடரிக் ஸ்டான்லி தியாகராஜன் திருவுருவ சிலையை ரிப்பன் மாளிகைக்கு முன்னால் திறந்து வைத்தார். ஏழை மக்களின் கல்வி நலன், பொருளாதார ஏற்றம், சமூக சமத்துவத்திற்கான முழுமூச்சாய் பாடுபட்டவ பெருமகனாரின் பெயரை சுருக்கி டி நகர் என்று அழைப்பது ஒரு வரலாற்று சிதைவு ஆகும். இனிமேலாவது நாம் அதை தியாகராயநகர் என்றுதான் அழைக்க வேண்டும்.

அங்குள்ள நடேசன் பூங்கா என்பது திராவிட இயக்க மும்மூர்த்திகளில் இரண்டாவதான டாக்டர் நடேசனார் நினைவாக வைக்கப்பட்டதாகும். சமூக அவலத்தை கண்டு பொங்கி எழுந்து, பிராமணர் அல்லாதோர் நல சங்கம் அமைய காரணமாக இருந்தவர் ஆவார்.
இவருடைய தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி, சொந்த ஊர் பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னகாவனம், வள்ளலார் பிறந்த ஊரும் இந்த ஊரே ஆகும். சொந்த ஊரின் பெயரை தலைப்பு எழுத்தாக வைத்துக் கொண்டவர் ஆவார்.. திராவிட மாணவர்கள் தங்கிப் படிக்கும் விதமாக திராவிடர் விடுதி என்று இலவசமாக நடத்தியவர்.மயிலாப்பூரில் அவர் வாழ்ந்த தெரு அவருடைய பெயராலேயே டாக்டர் நடேசன் சாலை என்று அழைக்கப்படுகிறது.

தாரவாடு மாதவன் நாயர் பிறப்பால் மலையாளியாக இருந்தாலும், தீவிர திராவிட இயக்க சிந்தனையில் ஊறித் திளைத்தவர். புகழ்பெற்ற மருத்துவராக இருந்தாலும் சமூக சமத்துவத்திற்கு பாடுபட்டார். தந்தை பெரியார் இவரை திராவிட லெனின் என்றே அழைத்தார்.நீதிக் கட்சியின் சின்னமாக நியாயத் தராசை வைத்தவர் ஆவார்.
ஜஸ்டிஸ் பத்திரிகையின் ஆசிரியர். தாதாபாய் நவரோஜி காக லண்டன் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைத்தவர். தாசப்பிரகாஷ் இல் இருந்து எழும்பூர் செல்லும் சாலை இவருடைய பெயராலேயே டி எம் நாயர் சாலை என்று அழைக்கப்படுகிறது

நவாப் கான் பகதூர் முஹம்மத் அபிபுல்லா சென்னை மாகாண ஆளுநர் நிர்வாக குழு உறுப்பினர் திருவாங்கூர் சமஸ்தான திவானாக பணியாற்றியவர் பார்ப்பனர் அல்லாதாருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்வரை பார்ப்பனர்களுக்கு எந்த பணி நியமனம் கொடுக்கக்கூடாது என்ற துணிச்சலான சட்ட முன்வரைவை கொண்டு வந்தவர் ஆவார்.அவருடைய பெயரால் தான் ஹபிபுல்லா சாலை அழைக்கப்படுகிறது.

சென்னை மாகாண சட்டசபையின் முதல் பட்டியல் சமூக உறுப்பினராகவும் நீதிக் கட்சியின் துணைத் தலைவராகவும் பறையர் பஞ்சமர் என்ற வார்த்தைக்கு பதிலாக ஆதிதிராவிடர் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்த திவான் பகதூர் மயிலை சின்னத்தம்பி ராஜாவின் பெயரால் அழைக்கப்படுவது தான் எம் சி ராஜா சாலை ஆகும்.

பனகல் அரசர் ராமராய நிங்கராயர் வழக்கறிஞர் ,பிராமணரல்லாதார் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெற லண்டன் சென்று வாதாடியவர். இரண்டு முறை சென்னை மாகாண முதல்வராக இருந்தவர் . இவர் முதல் அமைச்சராக இருந்தபோது தான் தலித் என்ற வார்த்தையை மாற்றி பூர்வீகக் குடிகள் எனும் பொருள்பட கூடிய “ஆதிதிராவிடர்” என்ற அரசாணையை பிறப்பித்தவர் இவரே! இவரது பெயராலேயே தியாகராய நகர் பனகல் பூங்கா, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அமைக்கப்பட்டுள்ளது..

திராவிட இயக்கத்தின் போர்வாள் ஆக இருந்த சௌந்தர பாண்டியனார் பெயரில்தான் பாண்டி பஜார் என்ற இரண்டு மிகப் பெரிய வியாபார தலமாக திகழும் இடம் அழைக்கப்படுகிறது.

நீதிக்கட்சியின் பொருளாளராகவும் சென்னை மாநகராட்சி தலைவராக விளங்கிய நாராயண செட்டியார் பெயரில் அமைக்கப்பட்ட பிரதான சாலை தான் ஜி என் செட்டி சாலை என்றே அழைக்கப்படுகிறது.

அதேபோல் தணிகாசலம் அவர்களும் தென்னிந்திய நல சங்கம் துவங்குவதற்கு முன்பாகவே வழக்கறிஞர் எத்திராஜுலு வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ,சமூக சமத்துவத்தை தீவிரமாக ஆதரித்தவர். 1925 சென்னை மாநகராட்சி தலைவராக திகழ்ந்தவர் அவருடைய பெயரால்தான் தியாகராய நகரில் பிரதான சாலைகளில் ஒன்றான தணிகாசலம் சாலை அழைக்கப்படுகிறது

அதேபோல் சென்னை மாநகராட்சி தலைவர் ஷரீப் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் செனட் உறுப்பினர் ஆக திகழ்ந்த திராவிட இயக்க பொறுப்பாளர்களில் ஒருவரான கான் பகதூர் முகமது உஸ்மான் ஷரீப், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய கவர்னராக16.5.1934 நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் ஆவார். அவரது பெயரில்தான் உஸ்மான் சாலை அழைக்கப்படுகிறது..

மேட்லி பர்கிட் போன்ற ஆங்கிலேயர்கள், தியாகராயர், உஸ்மான்,நடேசன் போன்ற தலைவர்களுக்கு இணையாக உச்சரிக்கப்படும் தெரு நாதமுனி,கோவிந்தன் தெருவாகும். இவர்கள் யார் எனில், சென்னையின் பாதாள சாக்கடை திட்டம் தோண்டும் போது,அந்த குழியில் விழுந்து உயிரிழந்த தொழிலாளிகள் ஆவர். அவர்களின் பணியை கவுரவப்படுத்தும் விதமாக அந்நாளைய பிரிட்டிஷ் அரசு இவர்களின் பெயரையே அந்த தெருவுக்கு சூட்டியது. ஆக இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க அனைத்து தரப்பு மக்களின் அடையாளங்களை சுமந்து கொண்டுள்ள சென்னையின் ஒரு பகுதி தான் தியாகராயநகர் ஆகும்.
சென்னையில் பூர்விக பகுதியான கருப்பர் நகரம் எனப்படும் பெத்தநாயக்கன்பேட் முத்தியால்பேட்டை மண்ணடி பகுதியில் போர்த்துகீசியர்கள் தெரு,ஆர்மீனியன் தெரு, ஏழுகிணறு தெரு என வரலாற்றை சுமந்துள்ள பகுதிகள் ஏராளம்..
2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது நான் பூக்கடை காவல் துணை ஆணையராக பணி புரிந்தேன். புதுக்குடியிருப்புகளான மணப்பாக்கம் போரூர் மடிப்பாக்கம் போன்றவை வெள்ளத்தில் தத்தளித்த போது பூர்விக நகரமான முத்தையால்பேட்டை தங்கசாலை பகுதிகளில் ஒரு இடத்தில் கூட நீடிக்க தண்ணீர் தேங்கவில்லை. உயர்நீதிமன்ற வளாகத்தில் வெள்ளத்திற்கான சுவடே இல்லை.. எத்தனையோ இயற்கை பேரிடர்களை கடந்து வந்த இந்த நகரம் இதையும் கடந்து, மீண்டு எழும்..

சாம்ராஜ்யங்களால் கட்டமைக்கப்பட்ட நகரம் பகைவர்களின் படையெடுப்பால் மற்றும் பல்வேறு காரணங்களால் அழிவை சந்திக்கும்.. சாமானியர்கள் உருவாக்கப்பட்ட நகரம் ஒருபோதும் வீழ்ந்து விடாது.. சென்னை சாமானிய மக்களின் நகரம்..❣️

Leave a Reply