ஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்

ஜோதிடம் படிக்க

ஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்

என் முதல் புத்தகத்தை எழுத துவங்குகிறேன்என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களில் குறைந்தது 30% பேர் ஜோதிடம் பற்றி தேடித்தேடி படிப்பவர்கள்

சாதாரண மக்களை விட பெரும்பாலும் மிக அதிகமான பயத்துடன் என்னை சந்திப்பவர்களும் அவர்கள் தாம்.ஜோதிடத்தை புத்தகம் வழியாகவும் online லும் படிக்கும் பெரும்பாண்மையோருக்கு இது பொருந்தும்

குழப்பதுடன் தீர்வை நோக்கி ஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்கள்.முதலில் நம்மை பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது என்ற இடத்தில் onlineல் துவங்குவார்கள்.

அடுத்து நாம் எதிர்காலத்தில் என்ன ஆவோம். ஏதாவது சொல்கிறார்களா என்று தேடுவார்கள். நல்லதாக சில வார்த்தைகள் கண்ணில் படும். பெருங்கனவுக்குள் செல்வார்கள். அது மேலும் ஆர்வத்தை தூண்டும்.தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஜாதகம் கொண்டிருக்கிறதா என்று தேடுவார்கள்..தான் விரும்பியதை தன் கனவை அடைந்துவிடுவேனா என்று மேலும் மேலும் தேடிக்கொண்டே இருப்பார்கள்.அது கூட பிரச்சனையில்லை.இடைஇடையே தன்னைப் பற்றிய மிக மோசமான விஷயங்களையும் படித்து விடுவார்கள். அங்கு தான் பிரச்சனை துவங்குகிறது. ஏனெனில் அது பயத்தை உண்டாக்கும். நாம் விரும்பும் காதலியோடு சேர முடியாது. சேர்ந்தால் உயிர் போய்விடும். 8ல் செவ்வாய் இருக்கிறது அற்ப ஆயுள்.புதன் நீசம் ஜோதிடம் கற்றுக்கொள்ளவே முடியாது

பயம் அதிகமாகிக்கொண்டே இருக்கும்

எனக்கு அடுத்த திசை சனி திசை மாரக திசை. எனக்கு அஷ்டமத்து சனி வர இருக்கிறது. அடுத்த இரண்டு வருடம் வாழ்க்கையே நாசமாகப்போகிறது. இப்படி அடுத்து அடுத்து பயம் அதிகமாகிக்கொண்டே இருக்கும். ஆனால் படிப்பதை நிறுத்த முடியாது.வெவ்வேறு ஜோதிட நூல்களை வாங்கிப்படிக்கத்துவங்குவார்கள். அதிலும் அதை பயம் துரத்தும்.தூக்கம் கெடும். மெல்ல மெல்ல ஜோதிட வளையத்திற்கும் முடிவில்லாமல் சுற்ற வைத்துக்கொண்டே இருக்கும். நிறைய பேர் ஒரே மாதிரி கூறியிருந்தாலும் ஏதாவது ஒரு வரி புதிதாக நம்பிக்கையாக கிடைத்துவிடாதா என்று மனம் ஏங்கும்.ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் விடை என்பது பெரும்பாலும் கிடைக்காது. இதற்கு முன் வாழ்க்கையில் இல்லாத பல புதிய மனத்தடைகள் அவர்கள் முன் வந்து நிற்கும்.அடுத்த கட்டமாக நேரடியாக ஜோதிடர்களிடம் செல்வது

அங்கு அந்த பயம் விஸ்வரூபம் எடுக்கும். அந்த பயத்துக்கு பரிகாரம் செய்ய துவங்குவார்கள். அதை செய்த பிறகும் அந்த பரிகாரம் வேலை செய்யுமா செய்யாதா என்று குழம்பி…வாழ்க்கை முழுவதும் அந்த குழப்பம் நிழல் மாதிரி தொடரும். இது எனக்கு எப்படித்தெரியும் என்றா கேட்கிறீர்கள்?நானும் மேல் சொன்ன அனைத்தையும் செய்திருக்கிறேன். அதனால தூக்கம் கெட்டிருக்கிறேன். நிம்மதி இழந்திருக்கேன். உயிர் பயத்தோட மாதக்கனக்கில் வாழ்ந்திருக்கேன் அதுவும் திருமண நிச்சயம் முடிந்த பிறகு.அதுவும் தேடல் என்று வந்துவிட்டால் அதன் ஆழம் வரை செல்லும் பழக்கம் எப்பொழுது எனக்கு உண்டு

என் உடல் ஒரு சோதனைக்கூடம் என்றால் என் செயல் எதையாவது தேடிகொண்டேயிருப்பது மட்டுமே. எனது திருமணம் நிச்சயம் நடந்து முடிந்த பிறகு எனக்கும் என் காதலிக்கும் ( இப்பொழுது மனைவி) பொருத்தம் இல்லை நான் இறந்துவிடவேன் என்று ஜோதிடர்கள் பயம் கொடுக்க இதன் தீவிரம் அதிகமானது. ஒரு புறம் ஜோதிடர்களை சந்திப்பது. மறுபுறம் நானே இரவு பகலாக ஜோதிடத்தை படிப்பது என்று முதலில் கண்கள் வலிக்க கணிப்பொறியில் ( Desktop ) படிப்பது.

மெல்ல முதுகு வலியோடு படிப்பது. அதன் பின்னர் கண்களை சுருக்கி முதுகு வலியோடு படிப்பது அதன் பின்னர் முதுகுவலி குறைக்க தரையில் உட்கார்ந்து முட்டிப்போட்டு எட்டிப்பார்த்தது படிப்பது.அப்பொழுதெல்லாம் பதினெட்டு மணிநேரம் தொடர்ந்து படித்தப்பிறகு கண்கள் மூடித்தூங்க நினைத்தால் ஆக்கினை துடித்தே கொல்லும். தூங்கவே முடியாது. எவ்வளவு முயற்சித்தாலும் அரைத்தூக்கம் மட்டுமே. கனவா நினைவா என்றே தெரியாது. இதெல்லாம் தொடர்ந்து பல மாதங்கள். அதற்கு பிறகு இந்த ஜோதிடத்தால் தெளிவாக எந்த வழியும் காட்ட முடியாது என்று முடிவுக்கு வந்து அதன் நினைவுகளை அழிக்க போராடியிருக்கிறேன்.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் என் நிதானம் இழக்கத்தொடங்கி அரைப்பைத்தியம் ஆனது வரை அனைத்தும் அனுபவித்து இருக்கிறேன்.அப்பொழுது தான் ஒரு இரவில் ஆக்கினை துடிக்க துடிக்க தூங்க முயற்சித்த எனக்கு அந்த அதிசயம் நிகழந்தது. அது இன்னும் மனதில் நிலையாக நின்றிருக்கிறது. முழு இருட்டில் உலகம் முழுவதும் மௌனமாக இருளாக நான் தனியனாகி ஒரு விடிவெள்ளியை போன்ற ஒரு நட்சத்திரத்தை கண்டேன்

அது நான் நடக்க என்னை பின் தொடர்ந்தது. என்னை காப்பது போல. நீ நிம்மதியாய் இரு. பயம் வேண்டாம் என்று. அன்று இரவு தான் மிக நீண்ட நாட்கள் கழித்து நிம்மதியாக தூங்கினேன்.மறுநாள் காலை எழுந்ததும் ஜோதிடத்தில் என்னுடைய குருவான பாஸ்கராவின் தொடர்பு எண் கிடைத்தது

அதன் என் வாழ்க்கை ஜோதிடத்தின் பக்கம் இழுத்து என்னை எனக்கு கண்டுகொள்ள செய்தது. இன்று அதையே நான் ஒவ்வொருவருக்கும் செய்துகொண்டிருக்கிறேன்.***அதனால் என்னிடம் வரும் ஜோதிடம் பற்றி படிப்பவர்களுக்கு மறக்காமல் கூறுவது நீங்கள் ஜோதிடத்தை தீவிரமாக அணுகவில்லை என்றால் தயவு செய்து ஜோதிட புத்தகங்களை படிக்காதீர்கள். அது திரும்ப திரும்ப உங்களுக்கு பயத்தை தான் கொடுக்கும். நிம்மதிய கொடுக்காது என்று கூறியிருக்கிறேன்

அந்த வகையில் பலரை அந்த சுழலில் இருந்து மீட்டுமிருக்கிறேன்.படிக்கவேண்டாம் என்று கூறுவது பாரம்பரிய ஜோதிடத்தின் மேல் உள்ள காழ்ப்பினால் அல்ல.ஏன் இனி கால அறிவியலை மேலும் வளர்த்து எடுக்க அடுத்த கட்டமாக பாரம்பரிய ஜோதிடர்களை சந்திக்கவே ஆசைப்படுகிறேன்

அவர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் படிக்கவும் இருக்கிறேன்.ஆனால் அந்த புத்தகங்களில் எதை எடுத்துக்கொள்ளவேண்டும் எதை தவிர்த்துவிடவேண்டும் என்ற தெளிவு எனக்கு என் அனுபவத்தால் வாய்த்திருக்கிறது. அதே தெளிவோடு ஆரம்ப நிலையில் ஜோதிடம் கற்க துவங்கும் யாராலும் இருக்கமுடியாது

கண்டிப்பாக உடையவே சாத்தியம் அதிகம். அதனால் படிக்காதீர்கள் அல்லது பயத்தை கொடுப்பதை நம்பாதீர்கள் என்று திரும்ப திரும்ப கூறி வந்திருக்கிறேன்.ஏனெனில் ஜோதிடம் என்பது மதம் அல்ல. மதம் தான் நம்பிக்கை சார்ந்தது. அதற்கு பயம் தேவை. ஜோதிடம் தெளிவைக்கொடுக்கும் ஞானம்

புரிதலை கொடுத்து ஒரு நல்ல பார்வையை கொடுத்து உங்களை குழப்பத்தில் இருந்து விடுவிக்கவேண்டும். அதற்கு மாறாக குழப்பத்தை கொடுத்தால் நம்பாதீர்கள்.பயத்தை தரும் எந்த பகுதியையும் படிக்காதீர்கள்.எனக்கு எதையும் வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பதில் விருப்பம் இருந்ததில்லை

செயல் தான் ஆதாரம்.அதனால் அடுத்தகட்டமாக கால அறிவியலையின் (TIME SCIENCE) அனைத்து கூறுகளையும் புத்தகமாக எழுதி வெளியிட முடிவு செய்துள்ளேன்.இதோ இன்று இந்த குருபூர்ணிமா நாளில் அதிகாலை எழுந்து மானசீகமாக விடிவெள்ளியை தரிசித்துவிட்டு இன்று எனது முதல் புத்தகத்தை எழுதத்தொடங்குகிறேன்

கண்டிப்பாக என் புத்தகத்தை படிப்பவர்களுக்கு அது பயத்தை கொடுக்காது. முடிந்த அளவு குழப்பத்தில் இருந்து தெளிவை நோக்கி நகர்த்திச்செல்லும்.இந்த நவீன வாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து விடுதலை அடைவதற்கான பார்வைகளை ஜோதிடத்தின் வழி முன்வைப்பதே இதன் நோக்கம். உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் பணிவுடன் கேட்டு நிற்கிறேன்

நன்றிபுகைப்படம் – Vinodh Baluchamy | Yaa Studioஅட்டை வடிவமைப்பு – Thiagarajan R

Leave a Reply