1-800-999-9999 — hi@loremipsum.com

நம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள்

Jothimani Sennimalai

Jothimani Sennimalai  

நம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள் ,

சிறு வயதிலிருந்தே என் தொடர்பான விசயங்களில் நான் தான் முடிவெடுப்பேன். அம்மா எப்போதும் அதை ஆதரித்தே வந்தார்கள்.

இந்த முடிவெடுக்கும் குணம் பொதுவாழ்வில் எனக்கு இன்றுவரை மிகபெரிய பலமாக இருக்கிறது. அப்படித்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முடிவையும் நானே எடுத்தேன். அப்போது எனக்கு வயது 21!

பிறகுதான் பிரச்சினையின் ஆழம் எனக்குப் புரியத்தொடங்கியது. திரும்பிய இடங்களில் எல்லாம் நான் ஒரு ‘பெண்’ என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டேன்.

பொம்பளைப்புள்ளையாக இருப்பது ஏதோ ஒரு தேசத்துரோகத்திற்கு சமமான குற்றமாக இருந்தது. ஆனால் அதை ஏற்க நான் உறுதியோடு மறுத்தேன்.

வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் சொந்தக்காரர்கள் கும்பல் கும்பலாக வந்து லாரி லாரியாக அறிவுரைகள் சொல்வார்கள். அவை அனைத்தும் என்பாற்பட்ட அக்கறையினாலானது என்பதால் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பேன். ஆனாலும் நான் என் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

வழக்கம்போல அம்மா பொட்டப்புள்ளைய கண்டிச்சு வளர்க்காத குற்றவாளியானார்கள். பொட்டப்புள்ளைய படிக்கவைப்பதில் உள்ள ஆபத்துகள் வேறு விரிவாக அலசப்பட்டது.

ஆனால் அதுகுறித்து எல்லாம் அம்மாவுக்கு எவ்வித வருத்தமும் இல்லை. நான் பெண் எனபது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக எப்போதும் இருந்ததில்லை.

ஆனால் அரசியல் என்ற கெட்டவார்த்தை அம்மாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. தனது விருப்பமின்மையை , தயக்கத்தை அம்மா என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் நான் எனது விருப்பத்தில் உறுதியாக நின்றேன்.

எங்கள் ஊரில் தலித் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் நீண்டகாலமாக அநீதி இழைக்கப்பட்டு வந்து. நான் அதை மாற்றவேண்டும் என்று விரும்பினேன். அதிகாரம் இருந்தால் செய்யமுடியும் என்று நம்பினேன்( அது தவறு என்று பின்னாளில் புரிந்தது!) .

அநீதிக்கு எதிரான எளிய செயல்பாடே எனது அரசியல் பிரவேசம். மற்றபடி பெரிய திட்டங்கள் எதுவுமில்லை. என்னை என்னைவிட நன்கறிந்தவர் எனது அம்மா. இறுதியாக ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது.

வீட்டில் யாருக்கும் விருப்பமில்லாத ஒரு செயலில் நான் இறங்குவதால் அரசியல் பணி தொடர்பாக உறவினர்கள் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. முக்கியமாக அதிகம் போக்குவரத்து இல்லாத ஊர் என்பதால் பக்கத்து சிறு நகரில் வந்து நின்றுகொண்டு வந்து என்னைக் கூட்டிப்போங்கள் என்று சொல்லக்கூடாது.

அம்மா தன்னால் முடிந்த நிதியுதவியை மாதாமாதம் என் செலவுக்குத் தரவேண்டும்( இந்த நிமிடம்வரை அம்மா அந்த வார்த்தையைக் காப்பாற்றி வருகிறார்கள்!)

இப்படியாகத்தான் இரவு பத்து, பதினொருமணிக்கு மேல் ஆண்களே வரத் தயங்கும் ஆள்நடமாட்டமற்ற சாலைகளில் ( பேய் பிசாசுகள் நடமாடும் நேரம்!) அவற்றுக்குத் துணையாக இருசக்கரவாகனத்தில் பயணிக்கக் கற்றுக்கொண்டேன்.

ஒவ்வொரு சவாலையும் எப்படியாவது நமக்குச் சாதகமாக மாற்றுவதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை வாழ்வு மீண்டும் மீண்டும் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
பலபெண்கள் பொருளாதார சுதந்திரம் இல்லாததால் தான் அரசியலுக்கு வரமுடிவதில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்க,ஒடுக்க நினைப்பவர்கள் பொருளாதார ரீதியாக பெண்களை ஒடுக்கும் தந்திரம் நெடுங்காலமாக இங்கு நிலவுகிறது எனபதை நாம் மறுக்கமுடியாது.

பள்ளியில் படித்த காலம் முழுக்க க்ளாஸ் லீடர், கல்லூரியில் எலக்டட் செகரட்ரி என்று எப்போதும் தலைமை பொறுப்புகளிலேயேதான் இருந்து இருக்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்கிற முடிவை எடுத்த போதுதான் ஒரு பெண்ணாக இருப்பதில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா என்று முதன்முதலாக மலைத்துப்போனேன்.

இந்த சமூகத்திற்கு ஒரு துரும்பைக் கிள்ளிப்போடுவதென்றால் கூட அது ஆணாக இருக்கவேண்டும். அந்த துரும்புகூட ஆண்பாலாக இருக்கவேண்டும் என்று புரிந்தபோது களைப்பாக இருந்தது. இருந்தும் களமிறங்கினேன்.

நம் பாலின அடையாளம் மிகவும் சிக்கலானது என்பதை எனக்கு உணர்த்தியது தேர்தல்தான்.

குடிதண்ணீர் பிரச்சினையை நான் நினைத்தது போல் அதிகாரத்தால் தீர்க்கமுடியவில்லை.இரண்டு ஆண்டுகள் அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கியதுதான் மிச்சம். ஒன்றும் நடக்கவில்லை.

சாதியக்கட்டமைப்புகளை அதிகாரத்தல் அசைக்கக்கூட முடியாது என்ற உண்மை பொட்டில் அறைந்தது. போராட்டம் தான் எஞ்சியிருக்கும் ஒரே வழி .

”ஏம்பா ஒரு பொட்டச்சி வந்து நியாயம் சொல்றதா” என்று எனக்கு எதிராக ஆதிக்கசாதியினரும் அரசியல் எதிரிகளும் அணிதிரட்ட ஆரம்பித்தார்கள்.

ஒவ்வொருநாளும் விதவிதமான அறுவெறுக்கத்தக பேச்சுகள் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து. மூன்றாண்டுகள் நீடித்த போராட்டம். எங்கே போனாலும் ”நீ பொம்பளை புள்ளை உனக்கெதுக்கும்மா இதெல்லாம்” என்பார்கள். நான் சொல்கிற சொல்லுக்கு மதிப்பே இருக்காது.

முதன்முறையாக சமூக போராட்டத்தில்கூட பாலின பாகுபாடு உண்டு என்பதை உணர்ந்ததும் அப்போதுதான். நியாயத்துக்காக ஆண் ஒரு முறை போராடினால் போதும், ஆனால் பெண் தன்னுடைய அடையாளத்துக்காக ஒருமுறையும் நியாயத்துக்காக ஒருமுறையும் என இரண்டு முறை போராடவேண்டி இருக்கும். இருந்தது. இருக்கிறது.

வாழ்வின் நெருக்கடிகளுக்கும் , சமூகத்தின் குரூரத்திற்கும் பழகியிராத வயது. மனமுடைந்து போனேன். வீட்டில் வந்து அழுதுகொண்டு படுத்திருந்த பகல்பொழுதொன்றில் அம்மா சொன்னது இப்போதும் என்னில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

“பொதுவாழ்க்கைன்னு போய்ட்டா நாலு பேரு நாலு சொல்லத்தன் செய்வாங்க. இப்படி வந்து படுத்துக்கிட்டு அழுவறதா பெரிசு. எந்திருச்சுப் போயி அடுத்து ஆகவேண்டியதப்பாரு”

அதுதான் அம்மா!

தேவதைகள்  

(இந்தவாரம் ஆனந்தவிகடனில் ‘ஆண்பால் பெண்பால் அன்பால் ‘ தொடரில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரையிலிருந்து)

Jothimani Sennimalai நம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள்  
%d bloggers like this: