போன்சாய் கலை
போன்சாய் கலை
எவ்வளவு பெரிய தேவையையும் மிகக்குறைந்த பொருள், இடம், நேரம் மற்றும் ஆற்றலைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வது ஜென் தத்துவத்தின் ஒரு கோட்பாடு. இயற்கையான சூழலில் பரந்து விரிந்து வளரும் தாவரங்களை, தொட்டிகளில் வைத்து வளர்க்கும் போன்சாய் கலை இந்த கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது.
சீனாவில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்போது, அரண்மனைத்  தோட்டத்தில், அனைத்து மரவகைகளையும் நட இடமில்லாமல் போனது. எனவே மரங்களை வளர்க்கும் மாற்று வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோட்டக்கலை நிபுணர்கள் ஈடுபட்டனர். இப்படித்தான் தட்டுகளில் மண் பரப்பி, மரக்கன்றுகளை நட்டு அவற்றை சிறிய வடிவில் வளர்க்கும் கலை தோன்றியது. தொடக்கக் காலத்தில் சீனர்கள் இக்கலையை ‘பென்ஜிங்’ என்று அழைத்தனர். இம்முறையில் சீன தேசத்தில் வளரக்கூடிய கிட்டத்தட்ட எல்லா மரவகைகளையும் அரசரின் தோட்டத்தில் வளர்த்து வந்தனர். விரைவில் பொதுமக்களும் கலையால் கவரப்பட்டு, தங்களது வீடுகளில் சிறுமரங்களை வளர்க்க ஆரம்பித்தனர்.
சீனாவில் இருந்து ஜப்பானுக்கு பரவியது
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து ஜப்பானுக்கு பவுத்தமதம் சென்றபோது,  பவுத்த துறவிகளின் வழியாக மரங்களை சிறியதாக வளர்க்கும் கலை ஜப்பானிலும் பரவியது.  காடுகள் அதிகம் இல்லாத, சிறு தீவுகளின் கூட்டமான ஜப்பானில் இக்கலை பெரும் வரவேற்பைப் பெற்றது. போன்சாய் என்ற பெயரும் ஜப்பானியர்களால் இடப்பட்டது. ஜப்பானிய மொழியில் ‘போன்’ என்றால் தட்டு, ‘சாய்’ என்றால் செடி.
ஜப்பானின் வளர்ந்துவந்த நகரங்களில் வாழ்விடங்களின் பரப்பளவு குறைய ஆரம்பித்ததாலும்,  தனிநபர்கள் தோட்டங்களை ஏற்படுத்தி பராமரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாததாலும்  கைகளுக்கு அடக்கமான ‘போன்சாய்’  மரங்கள் விரும்பி வளர்க்கப்பட்டன.
வளர்க்கும் முறை
போன்சாய் வளர்ப்பிற்கு முதல் தேவை பொறுமை. ஏனெனில், ஒரு முழுமையடைந்த போன்சாய் மரத்தை உருவாக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகளிலிருந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் கூட தேவைப்படும்.
ஒரு போன்சாய் மரம் வளர்ப்பவர், தனது மரம் அமையவேண்டிய வடிவத்தை மனதில் கொண்டு, அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்தையும் வடிவமைக்கிறார். எனவே தொட்டியில் வளரும் மரத்தின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும் கவனிக்கப்படுகிறது. இலைகள் தொடர்ந்து நீக்கப்படுகின்றன. தேவையான வடிவத்திற்கேற்ப கிளைகளும் வேர்களும் வெட்டப்படுகின்றன. அடிமரம் கம்பிகளைக்கொண்டு இறுகக் கட்டப்படுகிறது. கிளைகள் வளரவேண்டிய திசையில் சூரிய ஒளி படும் விதமாக அமைக்கப்படுகிறது.  கிளைகளின் திசையை மாற்றுவதற்காக கொக்கிகளும் பொருத்தப்படுகின்றன. தேவையான  தண்ணீரும் உரங்களும் தவறாமல் இடப்படுகிறது.
தேவையான தட்பவெப்பம்
போன்சாய்களை இரு வழிகளில் வளர்க்கலாம். ஒன்று, விதையை தட்டில் விதைத்து, அது துளிர்த்துவரும் நிலையிலிருந்து வடிவமைப்பது.
இரண்டாவது, சிறிய செடிகளையோ அல்லது கிளைகளையோ நட்டு, அவற்றை வளர்த்து வடிவமைப்பது.
ஒவ்வொரு மரத்துக்கும் வளர்ச்சி நிலை, உரங்களின் தேவை, சூரிய ஒளி, தட்பவெப்ப நிலை, தண்ணீர் ஆகியவை வேறுபடக் கூடியது. ஒரு குளிர்ப்பிரதேசத்தில் வளரும் மரத்தை மிகவும் வெப்பமான பாலைவனப்பகுதியில் வைத்து வளர்க்க இயலாது. அப்படி வளர்க்க வேண்டுமென்றால் செயற்கைக் குளிரூட்டம் செய்யப்படவேண்டியது அவசியம்.  இவ்வாறு போன்சாயின் தேவைகளை புரிந்துகொண்டு,  அவற்றைப் பூர்த்தி செய்வதன் மூலம் எல்லா மரங்களையுமே போன்சாய் வடிவத்தில் வளர்க்க முடியும்.
அலங்கார பொருள்
எந்த வகைத் தொட்டிகளில் அல்லது தட்டுகளில் போன்சாயை வளர்க்க வேண்டும், அவற்றின் கிளைகளை எப்படி அமைக்க வேண்டும்? அடிமரம், கிளைகள், வேர்கள் ஆகியவற்றின் அளவுகள் எந்த விகிதத்தில் அமைய வேண்டும் என்பதைப்பற்றி ஜப்பானிய மரபில்  பல விதிமுறைகள்  உண்டு.  அதன் தொடர்ச்சியாக இன்று உலகம் முழுவதும் போன்சாய் வளர்ப்புக் கலையைப் பற்றி 1200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன.
போன்சாய் மரங்களை வீடு மற்றும் அலுவலகங்களில் அலங் காரப் பொருளாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துவருகிறது. இதனால் அது வெறும் கலையாக மட்டுமின்றி,  வர்த்தக ரீதியான ஒரு தொழிலாகவும் மாறியிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *