Skip to toolbar
வி.பி.சிங்"

இந்தியாவின் திராவிட முகம் – வி.பி.சிங்”

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து காலமெல்லாம் சமூகத்தின் அடிதட்டு மக்களுக்காக சிந்தித்தும், செயலாற்றியும் வந்த மனிதர்கள் வரலாற்றில் அரிதாகவே தோன்றுகிறார்கள், புத்தர், சாகுமகாராசர், பூலே, பெரியார் என இந்திய துணை கண்டத்தில் குறிப்பிடதகுந்த அந்த பட்டியலில் தனக்கென தனி இடத்தை பிடித்த இந்தியாவின் முன்னால் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்த நாள் நாளை (25/06)

இந்தியாவின் திராவிட முகம் – வி.பி.சிங்”

1931ல் வளமான வடஇந்திய ராஜவம்சத்தில் தயாவின் மிகப்பெரிய ஜமிந்தார் குடும்பத்தில் பிறந்து, மண்டா ராஜவம்சத்தில் வளர்ந்த பெரும் செல்வந்தராக இருந்தபோதும், 1950களில் தெலுங்கானாவின் சிறிய கிராமம் ஒன்றில் தொடங்கி இந்தியா முழுவதும் பெரும் இயக்கமாக வளர்ந்த வினோபாவின் பூமிதான இயக்கத்தில் தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு அள்ளி வழங்கி வாழும் வரை எளிமையான மனிதராக இருந்து மறைந்தவர் வி.பி.சிங்

முப்பது வயதைக்கூட தொடாத இளைஞனாக இருந்தபோது தன்னுடைய சொத்துக்களை மக்களுக்கு வழங்கிய அந்த கொடையாளன் தான் பின்னாளில் இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் சாதனை அத்யாயமான மண்டல் பரிந்துரைக்கு உயிர் கொடுத்து, கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாழ்வு கொடுத்தவர்
ஏழை மக்களுக்காக பள்ளி நடத்தியதில் தொடங்கிய அவரது சேவை தாகம் வாழ்நாளில் இறுதி மூச்சுவரை நிற்கவே இல்லை.

1947-48ல் வாரணாசி உதய் பிரதாப் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றியதில் தொடங்கி, 1969-71ல் உத்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினர், 1971ல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், 1974ல் இந்திராகாந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சர், நெருக்கடிநிலை காலத்தில் வணிகத்துறைக்கான மத்திய அமைச்சர், 1980ல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தின் முதல்வர், 1984ல் மத்திய நிதி அமைச்சர், 1987ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், 1989ல் இந்தியாவின் பிரதமர்.. 90ல் தொடங்கி 2008ல் மரணிக்கிற வரை மக்களுக்கான களப்போராளி, இப்படி அரசியலில் ஒவ்வொரு படியாக உயர்ந்து உச்சத்தை தொட்டாலும் தனது எந்த ஒரு நடவடிக்கையும் இந்தியாவின் பெருவாரி மக்களான ஏழை மக்களுக்கானதாகவே இருக்க வேண்டும் என்ற உறுதியிலிருந்து ஒருபோதும் பின்வாங்காதவர்

“பிரச்சனையின் வேரை பார்த்தவர்”

உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக அவர் இருந்த காலம், சம்பல் பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு உத்திரபிரதேசத்தை அச்சுறுத்திய கொள்ளை கும்பலின் மீது அவர் கவனம் விழுந்தது, அதுவரை அந்த கும்பலை கட்டுப்படுத்த பலப்பிரயோகம் மட்டுமே செய்தவர்களுக்கு மத்தியில் அவர்களை இப்படிப்பட்ட செயலை செய்யும் நிலைக்கு தள்ளிய சூழல் எது, ஏன் அவர்கள் இப்படியானார்கள் என்ற காரணத்தை ஆராய்ந்தார் வி.பி.சிங். வளர்ச்சியின்மையும், பசியும், பஞ்சமும் அதற்கு காரணம் என்பதை அறிந்து அந்த பகுதியின் வளர்ச்சிக்கான செயல்களில் கவனம் செலுத்தினார் அதேசமயம் கொள்ளை கும்பலோடு பேச்சுவார்த்தைக்கும் தயாரானார், எல்லாம் சுமூகமாய் நகர்ந்த சூழலில் அவரது தம்பி படுகொலை செய்யப்பட்டார், கொள்ளையும் கட்டுப்படுத்த முடியாமல் போனது.. யாரும் எதிர்பார்க்காத, எடுக்கத்துணியாத ஒரு முடிவை எடுத்தார் அவர், “எனது தோல்வியை ஒப்புக்கொண்டு, பதவி விலகுகிறேன்” என்று முதல்வர் பதவியை தூக்கியெறிந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவும் வியந்துதான் போனது.

“கால்பதித்த துறையிலெல்லாம் வரலாறானவர்”

இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை காலத்தின் இருண்ட பக்கங்களை எல்லோரும் அறிவர் ஆனால் அந்த காலகட்டத்திலும் ஒரு சராசரி அரசியல்வாதியாக இல்லாமல், தனது ஆளுகைக்கு உட்பட்ட துறையின் மூலம் அந்த நெருக்கடி நிலையை பயன்படுத்தி என்ன செய்ய முடியும் என்று யோசித்து செயல்பட்டவர், 1976லிருந்து 77வரை அவர் வணிகத்துறை அமைச்சராக இருந்த காலம் உணவு பொருள் பதுக்கலின் விளைவால் மிகப்பெரிய விலைவாசி உயர்வு இந்த தேசத்தின் மக்களை நசுக்கிக்கொண்டிருந்த நேரம்.. அதிரடியாய் பல ரெய்டுகளை நடத்தி பதுக்கல் சக்திகளை அம்பலப்படுத்தி, பதுக்கல் பொருட்களை கையகப்படுத்தி விலைவாசி குறைவுக்கு அச்சாரமிட்டார்.. சேசன் தேர்தல் ஆணையராக இருந்தபோது தான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை இந்தியா உணர்ந்தது என்பார்கள் அதேபோல ராஜிவ்காந்தி அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக வி.பி.சிங் இருந்தபோதுதான் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை இந்த தேசம் உணர்ந்தது. வருமான வரித்துறைக்கு நிர்ணயித்த இலக்கை, நிர்ணயித்த காலத்தில் ஈட்டியதும் அவர் தான், அந்த துறையால் வரும் வருவாய் அந்த துறையை நிர்வகிப்பதற்கே பெருமளவில் செலவழிக்கப்படுவது குறித்து வருத்தப்பட்டவரும் அவர் தான், இந்தியாவில் கார்ப்பரேட் வரிகளை முழுமையாக முறைப்படி வசூலித்தால் போதும் சாமானிய மக்களின் மீதான வருமான வரியையே நீக்கிவிடலாம் என்றவரும் அவர் தான், இந்த தேசத்தின் பெருமுதலாளிகளின் வரி ஏய்ப்பை முறையாக அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுத்தவரும் அவர் தான்.

80 களில் பெரும் தொழிலதிபராக அறியப்பட்ட கிர்லோஸ்கர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்து சென்றார், அம்பானிகள் வளரத்தொடங்கிய அந்த காலத்தில் அவர்கள் இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினார், ராஜிவ் காந்தி காலத்தில் அலகாபாத்தின் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரும் பெரும்புகழ் பெற்ற இந்திய திரை நட்சத்திரமுமான அமிதாப் பச்சன் வீட்டிலும் சோதனை நடந்தது.. இந்தியாவின் வரி ஏய்ப்பு செய்யும் பெரும் தொழிலதிபர்கள் உச்சகட்ட பயத்தில் இருந்த நேரத்தில் பல்வேறு நெருக்கடிகளின் விளைவாய் ராஜிவ் காந்தியால் நிதித்துறையிலிருந்து பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டார். இந்த தேசத்தின் வளங்களை சுரண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக வழங்கப்பட்ட பரிசு அது. துறை மாற்றபட்டால் என்ன ஏழை மக்களை சுரண்டும் எதையும் எங்கேயும் அனுமதிக்க மாட்டேன் என பாதுகாப்பு துறையிலும் தனது அதிரடியை தொடர்ந்தார், “சோதனை ராஜ்யம்” என்று ஊடகங்கள் எழுதிய போதும் அசராமல் தொடர்ந்தார், அதிரடிகளின் உச்சமாக இந்த தேசத்தின் பிரதமரையே குறிவைத்த போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தார், இந்தியாவின் எல்லா தரப்புகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நடவடிக்கை இது, காங்கிரசில் பெரும் கொந்தளிப்பு எழுந்தது விளைவாய் இந்திரா காலத்திலிருந்து அமைச்சராய் இருந்தவரை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்களின் நலனுக்காய் மட்டுமே செயல்பட்டரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்கள், மக்கள் தான் பிரதானம் கட்சியோ பதவியோ அடுத்து தான் என்பதில் தெளிவாய் இருந்த வி.பி.சிங் கட்சியை விட்டு விலகினார், மானத்தோடு காங்கிரஸ் சின்னத்தில் நின்று வென்ற எம்.பி பதவியையும் தூக்கியெறிந்தார்

” துணைகன்டத்தின் பெருமைமிகு பிரதமர்”

காங்கிரசிலிருந்து விலகி அருண்நேரு, ஆரிப் முகமது கான் ஆகியோரோடு சேர்ந்து ‘ஜன் மோர்சா’ என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார், அமிதான் பச்சன் பதவி விலகியதால் காலியாக இருந்த அலகாபாத் மக்களவை இடைத்தேர்தலில் சாஸ்திரியின் பேரனை வீழ்த்தி வென்று மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். ராஜிவ்காந்திக்கு எதிராக தேசிய அளவில் பிராந்திய சக்திகளை ஒன்றிணைத்தார், ஜனதா தள், திமுக, தெலுங்குதேசம், அசாம் கன பரிசத் என்று ஜனநாயக சக்திகள் அத்தனை பேரையும் ஒன்றிணைத்தார்.. இந்திய தேசத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத வார்த்தையாக மாறிப்போன அந்த தேசிய முன்னணியின் தொடக்க விழாவை கலைஞர் நடத்தினார், மெரினாவை குழுக்கிய அந்த கூட்டம் தான் இந்தியாவில் மாபெரும் ஜனநாயக அரசியல் புரட்சியை நடத்தியது. எத்தனை காலமானாலும் இந்திய ஜனநாயகத்தின் பொக்கிசம் என்றால் அது தேசிய முன்னணி தான் என்கிற வாதம் எப்போதும் மறுத்துவிட முடியாது. எப்படி ராமாயணத்தில் அஸ்வமேத யாகம் நடத்திய ராமனின் குதிரை நுழைந்த இடமெல்லாம் அயோத்தியின் வசமானதோ அப்படி வி.பி.சிங்கின் பிரச்சார வாகனம் நுழையும் இடமெல்லாம் தேசிய முன்னணியின் வசமானது என்றெல்லாம் எழுதும் அளவிற்கு மக்கள் வரவேற்பு இருந்தது, தேர்தலில் வென்று இந்திய அரசியலின் இரண்டு எதிர்முகங்களான பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்கள் ஆதரவோடு தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது
டிசம்பர் 1, 1989ல் நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் கூட்டணியின் பிரதமராக ஜார்கண்ட் ஜாட் தலைவரான ஜோதி லாலை முன்னிறுத்தினார், அவர் மறுக்கவே இந்தியாவின் ஏழாவது பிரதமாரக, இந்திய பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் எழுச்சியின் அடையாளமான வி.பி.சிங் பதவியேற்றார், அந்த காலத்தில் அவரோடு இருந்தவர்கள் தான் இன்னமும் இந்திய அரசியலில் தனிப்பெரும் ஆளுமைகளாக வலம் வருகிறார்கள், கலைஞர், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங், ஓம் பிரகாஷ் சவுதாலா, பிஜூ பட்நாயக், ராம் விலாஸ் பாஸ்வான், என்.டி.ராமா ராவ் என்று பெரும் பட்டாளமே அவரோடு இருந்தது. அந்த கூட்டணி அதன் பிறகான அரசியல் சூழலில் தொடர்ந்திருக்குமானால் இந்தியா என்கிற தேசம் ஒன்றியமாய் கூட போயிருக்கும் ஆனால் தேசிய முன்னணியின் வீழ்ச்சி ஒட்டுமொத்த இந்திய அரசியலின் வீழ்ச்சியாய் முடந்தது விளைவு அன்று நாடே வியக்கும் வண்ணம் பெருவாரி வாக்குகள் வித்யாசத்தில் வென்ற ராம் விலாஸ் பாஸ்வான் இன்று சங்பரிவார அணியில் அணிவகுக்கும் கேவளத்தில் வந்து நிற்கிறது. கூட்டணிக்கான மதிப்பை அந்த மனிதர் அளவுக்கு தேசிய அரசியலில் அங்கீகரித்தோர் இல்லை, நாடெங்கும் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டை மையப்படுத்தி காங்கிரசை வீழ்த்தியபோது தமிழ்நாடு தேசிய முன்னணியை வீழ்த்தியது. திமுகவிலிருந்து பெருவெற்றி நிகழவில்லை என்ற போதிலும் மாநிலங்களவையிலிருந்த முரசொலிமாறனை அமைச்சராக்கினார். எம்.ஜி.ஆர் காலத்திலும் தமிழகத்திலிருந்து சத்தியவாணி முத்து போன்றோர் மத்திய அமைச்சரவையிலிருந்தாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை அந்த வகையில் கொஞ்சம் வலுவாக தமிழக பிரதிநிதி ஒருவர் அமைச்சரவையில் காலூன்றியது வி.பி.சிங் அரசில் தான்.

அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலம் பதினோறே மாதங்கள் ஆனால் சந்தித்த சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல, தீவிரவாதிகளால் உள்துறை அமைச்சரின் மகள் கடத்தப்பட்டதில் தொடங்கி, ரதயாத்திரை வரை நாளும் பொழுதும் பிரச்சனைகளோடே அவர் காலம் நகர்ந்தது ஆனால் மிகப்பெரிய சாதனைகளை செய்தார். அண்ணல் அம்பேத்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தது, அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கியது உள்ளிட்டவையும் அதில் அடங்கும்

“பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வொளி”

ஆதிக்க சக்திகளின் கூடாரமாக இருந்த இந்திய அரசியல் களத்தை, சமூக களத்தை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களமாக மாற்றியது தான் அவரின் சாதனை மகுடத்தின் நிரந்தர ரத்தினக்கல், 1950 ல் இந்திய அரசியல் சாசனத்தை அண்ணல் இயற்றியபோது பட்டியலின மக்களுக்கான இடபங்கீடு சட்டபூர்வமானதாக மாற்றப்பட்டது ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளங்காணுவதில் இருந்த சிக்கலால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது, அதன் பரிந்துரை அடிப்படையில் மொரார்ஜி தேசாய் காலத்தில் 1978ல் இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அல்லது மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டது, பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்சிக்கு socially and uneducationally backward என்கிற அடிப்படையிலான இடஒதுக்கீட்டை தீர்வாக முன்வைத்த மண்டலின் பரிந்துரை பத்தாண்டுகளுக்கு மேல் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் அதை தூசுதட்டி எடுத்தார் வி.பி.சிங், இந்தியாவின் அத்தனை சக்திகளும் அவரை எதிர்த்து களமிறங்கின, ஊடகங்கள் மிகக்கடுமையாக விமர்சித்து எழுதின, நாடெங்கும் ஆங்காங்கே கலவரம் வெடித்தது, கோஸ்வாமி என்பவர் தற்கொலை செய்துகொண்டார், நீதிமன்றமும் வி.பி.சிங்கின் முடிவுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது, அந்த நெருக்கடியான காலத்தில் அவரோடு முழுமையாக துணை நின்றது தமிழகமும், திராவிட சக்திகளும் தான். நாடெங்கும் மண்டலுக்கு எதிரான போராட்டம் நடந்தபோது இந்த பெரியாரிய நிலத்தில் மட்டும் தான் மண்டலுக்கு ஆதரவான போராட்டம் நடந்தது, மண்டலுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஒரே நீதிபதி மாண்பிமை பொருந்திய ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் மட்டுமே, அந்த நிலையில் தான் தி.க தலைவரின் உத்தரவினால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கொளுத்தி குடியரசு தலைவருக்கு தந்தி அனுப்பினர் பெரியாரிய போர்ப்படை தளபதிகள். தமிழர்களின் உதவியோடு எல்லாவற்றையும் எதிர்கொண்டார், பதவியே போனாலும் பரவாயில்லை மக்கள் நலனே முக்கியம் என்று ஆகஸ்ட் 8, 1990 ல் மண்டல் கமிசனை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டமியற்றினார்.. இதன் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் அமுக்கப்பட்ட ஒரு பெரும் பிரிவின் வளர்ச்சிக்கான விதையை தூவினார், இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்யாயத்தின் முன்னுரையை எழுதினார். அதைத்தொடர்ந்து கலைஞர் சமூக நீதி காவலர் என்ற கம்பீரமான பட்டத்தை வி.பி.சிங்கிற்கு அளித்தார்.
பட்டியலின மக்களின் இடப்பங்கீடு பாதிக்கப்படாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இடப்பங்கீட்டை உறுதுபடுத்திய அவரை, சாதியின் பெயரால் வி.பி.சிங் இந்தியாவை பிளவுபடுத்திவிட்டார் என்று விமர்சித்தன ஊடகங்கள் ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. சங்பரிவார சக்திகள் வேறுவகையில் சூழ்ச்சி செய்தன,
அத்வானியின் ரதயாத்திரையை பீகாரில் தடுத்து, கைது செய்தார் லல்லு பிரசாத் யாதவ் அதை காரணம் காட்டி தனது ஆதரவை திரும்பப்பெற்றது பா.ஜ.க, அதன் விளைவாய் நவம்பர் 11, 1990ல் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் நள்ளிரவு வரை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் முடிவில் தோற்கடிக்கப்பட்டார், அன்று அவர் பேசிய நாடாளுமன்ற உரை இந்தியாவின் ஒவ்வொரு மக்களும் படிக்க வேண்டிய பாடம், அவர் எதிர்கட்சிகளை நோக்கி கேட்ட கேள்வி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான கேள்வி, அந்த உரையின் தொடக்கத்திலேயே பெரியாருக்கும், அம்பேத்கருக்கும், ராம் மனோகர் லோகியாவிற்கும் நன்றி சொன்னார், பதினோறே மாதத்தில் ஒரு சகாப்தமாய் உறுபெற்று ஓய்வுக்கு சென்றார்

“தமிழகமும் வி.பி.சிங்கும்”

தமிழகத்தில் வேறெந்த வடஇந்திய அரசியல் ஆளுமைகளையும் விடவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர், தமிழனின் அழுகுரலுக்கு முழுமையாய் செவிமடுத்த ஒரே இந்திய பிரதமர் அவர் தான், கலைஞரின் கோரிக்கையை ஏற்று தமிழக வாழ்வாதார சிக்கலான காவிரி விவகாரத்தை தீர்க்க காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, ஈழ தமிழர்களின் நலனுக்காக அமைதிப்படையை திருப்பி அழைத்து, டெல்லியிலே பெரியார் சென்டர் தகர்க்கப்பட்டபோது கண்டனம் தெரிவித்தது, மேடையில் கலைஞரால் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா பெயரையும், காமராசர் பெயரையும் வைத்தது என்று தமிழர்களோடு மானசீகமாக உறவு வைத்திருந்த இந்திய தலைவர் அவர்
தமிழர்களும் அவர் மீது பேரன்பு வைத்திருந்தனர் மண்டல் விவகாரத்தில் அவரை முழுமையாக ஆதரித்தவர்கள் தமிழர்களே, ஆட்சியை இழந்த பின்னும் அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது கலைஞரின் தமிழக அரசே. அவருக்கு சிறுநிரகம் பாதிக்கப்பட்டபோது எங்களது சிறுநிரகத்தை எடுத்துகொள்ளுங்கள் என்று கடிதங்களால் அவரை திணற வைத்தவர்களும் தமிழர்களே.

“வாழ்ந்தவரை களப்போராளி”

ஆட்சியை விட்டு விலகியபோதும் கடைசி வரை மக்களுக்காக போராடியவர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நாடெங்கும் நடந்த மதக்கலவரங்களை கட்டுப்படுத்தக்கோரி மும்பையிலே தனியாளாய் உண்ணாவிரதம் இருந்தார், எதிர் தரப்பு அவர் பந்தலுக்கு எதிராய் அமர்ந்து உண்ணும் போராட்டம் நடத்தினர், கடுப்பாகி போனவர் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தினார் உடல்நிலை மிக மோசமடைந்தது, அரசு வேடிக்கை பார்த்தது, அவரது நண்பர் அரசு மீது வழக்குத்தொடர போகவே அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர், அப்போது ஏற்பட்ட சிறுநீரக கோளாறோடு தான் சாகும் வரை வாழ்ந்தார்
டெல்லியிலே குடிசை அகற்றம் நடந்தபோது, துடித்துபோய் டெல்லிக்கு ஓடி மக்களோடு களத்தில் இருந்தார். தாத்ரியில் விலசாய நிலம் அம்பானிக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து அந்த நிலத்தில் ஏர் உழுதார்
பதவிகளை நோக்கி ஓடியவர்களுக்கு மத்தியில் பதவிகளை விட்டு விலகி ஓடியவர் அவர், 1996 ல் ஐக்கிய முன்னணி வென்ற பின்னர், யார் பிரதமர் என்ற கேள்விக்கு எல்லோரும் உச்சரித்த ஒரே பெயர் வி.பி.சிங் ஆனால் அவரோ பதவியேற்க மறுத்தார், அதன் பிறகு தான் கலைஞரின் பெயர், ஜோதிபாசுவின் பெயர் எல்லாம் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் தேவகௌடா பிரதமரானார், வாழ்நாள் முழுவதும் மக்களின் மீதான அரசுன் அடக்குமுறைக்கு எதிராக போராடியவர் 2008ல் புற்று நோயால் டெல்லியில் காலமானார்
இன்னொரு பிறவியிருந்தால் தமிழனாக பிறக்க விரும்பிய அந்த மனிதனை, ஊழலையும் மதவாதத்தையும் எதிர்த்தே அரசியல் செய்த அந்த தலைவனை, பல ஆயிரம் ஆண்டுகால அநீதிக்கு பதினோறே மாதத்தில் முற்றுப்புள்ளி வைத்த அந்த புரட்சிகாரனை, அவரது பிறந்த நாளில் நினைவுகூர்வது இந்தியாவின் கடமை

நவம்பர் 11, 1990 ல் ஆட்சியை இழந்த பின்பு நள்ளிரவில், நெஞ்சை நிமிர்த்தி அவர் சொன்னார், “என் கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் நான் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிட்டேன்”

சமூகநீதியை விரும்புகிற கடைசி மனிதன் வாழும்வரை வி.பி.சிங் வாழ்வார்
.
சூரியமூர்த்தி பதிவு..🤝❤

#arakkarVPS

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *