வீட்டை பராமரிப்பது எப்படி

வீட்டை பராமரிப்பது எப்படி

பெருநகரங்களில் குடியிருப்பவர்களுக்கு இடப்பற்றாக்குறை என்பது மன அழுத்தத்தை தரக்கூடிய விஷயம். வாடகை வீடு அல்லது சொந்த வீடு எதுவாக இருந்தாலும் குறைந்த அளவில் வீட்டு உபயோகப்பொருட்கள் இருந்தால் குறைந்த நேரத்தில், அதிக செலவில்லாமல் வீட்டை பராமரிக்கலாம். கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு செல்லும் நகர வாழ்க்கையில் வீட்டை பராமரிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீடு சிறிய அளவில் இருக்கும் பட்சத்தில் பர்னிச்சர் பொருட்கள் அதிகமாக வேண்டியதில்லை. வீட்டை பராமரிப்பதும் சுலபம். குறைந்த செலவிலும், நேரத்திலும் வீட்டை பராமரிப்பு செய்வது பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

இடம் தேர்வு   கட்டுமான செய்திகள்

எல்லா வீடுகளிலும் உள்ள குறை என்னவென்றால், அனைத்து அறைகளிலும் அழகு சாதன பொருட்கள் மற்றும் ‘பர்னிச்சர்களை’ நிரப்பி வைத்திருப்பதுதான். அளவாக இருக்கும் அழகு சாதன பொருட்கள்தான் வீட்டுக்கு மேலும் கச்சிதமான அழகை தரும். தேவையான பொருட்கள், சரியான இடத்தில் வைக்கப்படும்போது சுத்தமான சூழல் வீட்டுக்குள் ஏற்படுவதோடு மனதுக்கு இதமாகவும் இருக்கும். அவ்வப்போது பர்னிச்சர் பொருட்களின் இடத்தை மாற்றி வைத்தும் புதிய தோற்றத்தை வீட்டுக்குள் கொண்டு வரலாம். வீட்டு உபயோகப்பொருட்கள் குறைவாக இருந்தால் சிறிய அறையும் பெரியதாக தெரியும்.

சில படங்கள் போதும்

பல வீடுகளில் விதவிதமான ‘பிரேம்கள்’ போடப்பட்ட படங்கள் மற்றும் நவீன ஓவியங்கள் பல்வேறு அளவுகளில் மாட்டப்பட்டிருக்கும். அவற்றில் பல படங்கள் இல்லாவிட்டாலும் அந்த அறை அழகாகத்தான் இருக்கும். இடத்தின் தன்மைக்கு பொருந்தாத நிறங்கள், எதிர்மறையான கருத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்ட படங்கள் அல்லது ஓவியங்கள் மனதில் சோர்வான எண்ணங்களை உண்டாக்குகின்றன என்று உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அவ்வாறான படங்களை அறைகளில் மாட்டுவதை விடவும், அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட ‘வால்பேப்பர்களை’ அந்த இடங்களில் ஒட்டி அழகு படுத்தலாம்.

அழகு செய்யும் கண்ணாடி

வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் சிறிய அறையை பெரியதாக காண்பிக்க கண்ணாடியை பயன்படுத்தலாம் என்கிறார்கள். குறிப்பிட்ட அறை அல்லது வரவேற்பறையின் இரண்டு பக்க சுவர்களிலும், பொருத்தமான நீளம் மற்றும் அகலங்களில் இரண்டு கண்ணாடிகளை எதிரெதிராக மாட்டி வைத்தால் அறை பெரியதாக தோற்றம் தரும். புதுமையான இந்த முறை கடைப்பிடிப்பதற்கும் எளிதானது.

வண்ண விளையாட்டு

எப்போதும் பளிச்சென்று, கண்ணை கவரும் வண்ணங்களை தேர்ந்தெடுத்து சுவர்களுக்கு பூச வேண்டும். அறையின் சுவர்களுக்கு அடிக்கப்பட்ட வண்ணம் ‘பர்னிச்சர்’ பொருட்கள், திரைத்துணிகள், தரை விரிப்புகள் ஆகியவற்றோடு பொருந்தும் வகையில் இருப்பது முக்கியம். அவை அனைத்தும் ஒரே வகை நிறத்தில் இருந்தால் பார்ப்பதற்கு கண்ணை கவரும். அறையின் நிறத்துக்கு நேர் எதிரான வண்ணத்தில் சுவர்க்கடிகாரம், பூ ஜாடிகள், புத்தக அலமாரி ஆகியவற்றை வித்தியாசப்படுத்தி காட்டினால் இன்னும் அழகாக தோற்றமளிக்கும்.

கச்சிதமான ‘லைட்டிங்’

சிறிய அளவுள்ள வீட்டில் மேற்புற ‘சீலிங்’ பளிச்சென்ற வெண்மை நிறத்தில் ‘டிஸ்டெம்பர்’ அடித்து பொருத்தமான ‘லைட் செட்டிங்’ செய்து விட்டால் கண்ணை கவர்வதாக இருக்கும். சரியான இடைவெளிகளில் பொருத்தப்பட்ட கண் கூசாத சி.எப்.எல். விளக்குகள் மென்மையான ஒளியை தருவதோடு, அறையின் சூழ்நிலையை அமைதியாக மாற்றுகிறது. ‘லைட் செட்டிங்’ மேற்புற ‘சீலிங்’–ல் இருப்பதுதான் சிறப்பு. ‘அரோமா’ மெழுகுவர்த்திகள் வைப்பதற்கான ‘ஸ்டாண்டுகள்’ அமைத்து மாலை நேரங்களில் ஏற்றி வைக்கலாம்.  இதனால் மின்சார சிக்கனம் ஆவதோடு வாசனையான சூழலும் கிடைக்கும், வீட்டை பராமரிப்பது எப்படி  ? ..

Properties for sale in Chennai