டாக்டர் ஸாகிர் நாயக்கின் தொலைக்காட்சி சானல்கள் முடக்கப்பட்டுள்ள்ளன. அது மட்டுமல்ல யூ டியூப் போன்றவற்றில் உள்ள அவரது உரைப் பதிவுகளையும் விரைவாக நீக்குமாறு இந்திய அரசு கேட்டுக் மொண்டுள்ளது. மகாராஷ்டிர பாஜக அரசு இன்னும் ஒருபடி மேலே போய் அவரது பேச்சுக்களை மட்டுமல்ல எழுத்துக்களையும் ஆராயப் போகிறார்களாம். விஷயம் அத்தோடும் முடிவடையவில்லை. இனி மாவட்ட அளவில் கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி எல்லா சானல்களையும் கண்காணிக்கப் போகிறார்களாம்.
ஆக இனி சிறுபான்மை மதத்தவரின் அடிப்படை மதப் பிரச்சாரங்கள் எதுவும் கேபிள் தொலைகாட்சி உட்பட எதிலும் வெளியிடுவது சாத்தியமில்லாமல் ஆக்கப்படுகிறது.
கருத்து மற்றும் மதச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் இன்னொரு தாக்குதல் இது.
இந்த அனைத்திற்கும் பின்னணி என்ன?
வங்கதேசத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பங்கேற்ற ஏழுபேர்களில் சிலர் டாக்டர் ஸாகிர் நாயக்கின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டவர்களாக வங்க தேச அரசு கூறியுள்ளதாம். அதைச் சாக்காக வைத்துக் கொண்டு எந்த ஆய்வையும் செய்யும்முன்னரே தடைகளைத் தொடங்கி விட்டனர்.
டாக்டர் நாயக் உலக அளவில் அறியப்பட்ட ஒரு மதப் பிரச்சாரகர். சென்னையில் ஒரு முறை நான் அவர் பேச்சைக் கேட்டுள்ளேன். நல்ல ஆங்கிலத்தில் அவர் தன் மதத்தின் சிறப்புக்களை விளக்குவதில் வல்லவர். அவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. வெளிப்படையாக மதப் பிரச்சாரம் செய்யும் அவர் தீவிரவாதத்தை ஆதரித்து எங்கும் பேசியதாகத் தெரியவில்லை.
இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அது குறித்து ஒரு அரசு ஆராய்வது என்பதைக் குறை சொல்ல இயலாடு. ஆனால் எந்த ஆய்வுகளையும் தொடங்கும் முன்னரே இப்படியான நடவடிக்களை தொடங்குவதும் அச்சமூட்டும் பிரச்சாரங்களைச் செய்வதும் என்ன நியாயம்?
# # #
காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் எல்லோராலும் மதிக்கப்படக் ஊடிய ஒரு தலைவர். காவி பயங்கரவாதத்தை அவர் எந்நாளும் விமர்சிக்கத் தயங்கியதில்லை. எனவே அவரை எப்போதும் அவர்கள் குறி வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
அவர் எப்போதோ ஒரு முறை டாக்டர் ஸாஹிர் நாயக்குடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்டுள்ளாராம். அதை இன்று பிரச்சினை ஆக்கியுள்ளனர்.
சுடச் சுட அத்ற்கு பதில் சொல்லியுள்ளார் திக்விஜய். உங்கள் ஸ்ரீ ஸ்ரீ கூடத்தான் ஸாஹிர் நாயக்குடன் ஒரே மேடையில் பேசியுள்ளார். என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல மலேகான் முதலான பயங்கரவாதத் தாக்குதலில், இன்றைய வங்கதேசத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை விட அதிகம் பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களில் பங்கேற்ற சாத்வி ப்ரக்ஞாவை ராஜ்நாத் சிங் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளார்.
# # #
உரிய ஆய்வுகளுக்கு முன்னரே அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இந்த முயற்சிகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவை.
– பேராசிரியர் அ.மார்க்ஸ்