Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

பி ஜே பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பி ஜே பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பி ஜே பி யின் டிஜிட்டல் படையின் ரகசியங்கள்

பி ஜே பி டிஜிட்டல் பிரிவில் பணிபுரிந்த எழுத்தாளரும் பட இயக்குனருமான சாத்வி கோஸ்லா.

பா.ஜ.கவின் டிஜிட்டல் பிரிவில் பணிபுரிந்த எழுத்தாளரும் பட இயக்குனருமான சாத்வி கோஸ்லா.
ஊடகவியலாளர் சுவாதி சதுர்வேதியின் “I am a troll” புத்தகம் பி.ஜே.பியுடைய டிஜிட்டல் படையின் ரகசியங்களை அம்பலப்படுத்தி மோடியின் குட்டை உடைத்திருக்கிறது. இந்நூலில் முக்கிய சாட்சியமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பவர், பி.ஜே.பி.யில் தன்னை ஒரு தன்னார்வலராக இணைத்துக்கொண்டு அவர்களின் சமூக ஊடக மையமான NDOC (National Digital Operations Centre)இல் பணியாற்றிய சாத்வி கோஸ்லா. அவருடைய நேர்காணலொன்று கேரவன் இதழில் வெளிவந்திருக்கிறது. தான் அமைப்பில் இணைந்தது பற்றியும் அவர்களோடு முரண்பட்டு வெளியேற நேர்ந்ததைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் அமீர்கான், இந்தியாவில் வளர்ந்துவரும் சகிப்பின்மை குறித்துத் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். கடந்த ஐந்தாறு மாதங்களாக இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளைப் (கல்புர்கி, பன்சாரே, தாத்ரி படுகொலைகள்) பார்க்கும்போது பாதுகாப்பின்மையும் அச்சவுணர்வும் மேலோங்கி இருப்பதாகவும் தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா என்று தன் மனைவி கேட்டதாகவும் சொல்லித் தனது கவலையைப் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து அவருக்கு எதிரான கோஷங்கள் தீவிரமாகப் பரவின. அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கங்கள் எழுந்தன. ஸ்நாப் டீலின் விளம்பரத் தூதுவராக இருந்த அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்கள். தொடர்ந்து ஸ்நாப்டீல் மட்டுமல்ல, இந்திய சுற்றுலாத்துறையும் (தனது தூதுவராக இருந்த) அவருடனான ஒப்பந்தத்தைக் கைவிட்டது. கூச்சலிட்டவர்கள் ஒரு வெற்றியை ருசிபார்த்தபடி கலைந்து போனார்கள்.
ஆனால், இவர்கள் யார்? ஒரு மக்கள் திரளா? சிறு குழுவா? கார்ப்பரேட் நிறுவனமே பின்வாங்குகிற அளவுக்குப் பெரும் அரசியல் சக்தியா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சாத்வியின் நேர்காணலில் விடை இருக்கிறது. சாத்வி கோஸ்லா பாரம்பரியமாகவே காங்கிரஸ் ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவரைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் தலைமையில் ஒரு வெற்றிடம் இருப்பதாக உணர்கிறார். ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தின் வழியாக ஆட்சி மாற்றத்தைக் கருதுகிறார். அப்போது அவர் முன் இரண்டு தேர்வுகள்தான் இருந்தன. ஒன்று அண்ணா அசாரே. மற்றொன்று மோடி. தனது ட்விட்டர் பக்கத்தில் (அன்றைய ஆளும்) காங்கிரஸின் மீதான விமர்சனங்களை எழுதுகிறார். இந்த ட்வீட்ஸ்தான் பி.ஜே.பி.யின் பார்வையை அவர்மீது விழவைத்தது. பி.ஜே.பி.யில் இணைந்து கொள்ளும்படி உடனடியாக அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. கட்சியில் சேர மறுத்துவிட்ட அவர், ஒரு தன்னார்வலராகப் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார். எனவே, தங்களது Mission 272+ இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு தன்னார்வலராகப் பணியாற்றும்படி அவர் வரவேற்கப்பட்டார்.
பதிவுசெய்துகொண்டதும் NDOC (National Digital Operations Centre)இல் அவர் ஒரு தன்னார்வலர் ஆனார். தன்னார்வலர்களுக்கான பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களிலும் அவர் இணைக்கப்பட்டார். ஒரு எம்.பி.ஏ பட்டதாரியான அவருக்குத் தன்னைப்போலப் படித்த பட்டதாரிகளும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் கார்ப்பரேட் பின்புலம் உடையவர்களும் ஒருங்கிணைந்து அங்கே பணியாற்றுவது பெரிய உற்சாகத்தை அளித்தது. தன்னைப் போன்ற நிறைய தன்னார்வலர்களை அமைப்பிற்குள் கொண்டுவருவது, ஸ்மிருதி இராணி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களுக்கான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க உதவுவது, மோடியின் “Chai Pe Charcha” எனும் தேர்தல் பிரச்சார நிகழ்வை நடத்துவது என ஆரம்பத்தில் ரொம்பவும் உத்வேகத்துடனும் இந்திய அரசியலில் ஒரு மாற்றம் நிகழப்போகும் நம்பிக்கையுடனும் அவர் தனது பணிகளைச் செய்தார். எனினும் ஒரு காந்தியவாதியான அவருக்குத் தான் பணியாற்றுகிற அமைப்பின் ஆபத்தைப் புரிந்துகொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை. கருத்தியல்ரீதியான விவாதங்களாக இல்லாமல் சிறுபான்மையினர், மாற்றுக்கருத்துடையவர்கள், தனது அரசியல் எதிரிகள் எனப் பலரையும் இவர்கள் குறிவைத்துத் தாக்குவதையும் வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்புவதையும் விரைவிலேயே கண்டுணர்கிறார்.
NDOC இன் தலைமைப் பொறுப்பில் இருந்த அரவிந்த் குப்தா ஒரு ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திடும்படி வாட்ஸ் ஆப் மெசேஜ் ஒன்றை சாத்விக்கு அனுப்பினார். அந்தப் பெட்டிஷன் அமீர்கானை ஸ்நாப்டீல் விளம்பரத்தூதர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்னும் கோரிக்கையாக இருந்தது. சாத்வி சொல்கிறார் : சிறுவயதில் இருந்தே அமீர்கான், ஷாருக்கான் படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர்கள் எங்களுடைய ஹீரோக்கள். திடீரென அவர்கள் “முஸ்லிம்”களாக்கப்பட்டபோது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
யார் மீதெல்லாம் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பது குறித்து ஒரு பட்டியலே இருப்பதாகவும் அதில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி போன்ற தலைவர்கள் மட்டுமல்லாமல் பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போன்ற ஊடகவியலாளர்களும் அடக்கம் என்றும் சாத்வி சொல்கிறார். இவற்றையெல்லாம் பார்த்தபின்பு அவநம்பிக்கையோடும் அதிர்ச்சியோடும் இவர்களுடனான தொடர்பை முறித்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்படி ஒன்றிரண்டு தன்னார்வலர்களை இழப்பது அவர்கள் மூலமாக உண்மை வெளிவருவது குறித்தெல்லாம் பி.ஜே.பிக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்படியானவர்களை காங்கிரஸின் கையாட்கள் என முத்திரை குத்துவது, கொலைமிரட்டல் விடுப்பது, பெண்களாக இருக்கும்பட்சத்தில் பாலியல் அவதூறுகளை அள்ளிவீசுவது என்பதாக எதிர்வினையாற்றுகிறார்கள்.
சாத்வியும்கூட இந்த ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு இப்படியான எதிர்வினைகளைச் சந்தித்தபடிதான் இருக்கிறார். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தபோதும் சாத்வி இந்த உண்மைகளைப் பகிரங்கப்படுத்தியதற்குக் காரணம், இனி சமூக ஊடகங்களில் பார்க்கப்போகும் மீம்ஸ்களோ, ட்ரோல் படையோ, வாட்ஸ் ஆப் தாக்குதலோ தற்செயலானது அல்ல என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.பி.ஜே.பி.யின் டிஜிட்டல் உலகம் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. அங்கே தன்னார்வலர்களும் முழுநேர ஊழியர்களும் மட்டுமல்ல விலை கொடுத்து வாங்கப்படும் நெட்டிசன்களும் எண்ணற்ற பேர் இருக்கிறார்கள். அதாவது சமூக வலைத்தளங்களில் லைக் போடுவதற்கும் பகிர்வதற்கும் ரீட்விட் செய்வதற்கும் அவற்றில் கணக்கு வைத்திருப்பவர்கள் விலைகொடுத்து வாங்கப்படுகிறார்கள். ஏழு ட்விட்கள் பகிர்வதற்கு 40 ரூபாய் பணம் கொடுக்கப்படுவதாக “I am a troll” நூலாசிரியர் சுவாதி சதுர்வேதி சொல்லியிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, பி.ஜே.பி இப்படி விலைகொடுத்து வாங்குவதை கோப்ராபோஸ்ட் இணையதளமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியில் அவர்கள் ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்துகிறார்கள். அரசியல்வாதிகளுடனான வியாபாரத்திற்காக (நேர்மையற்ற வழியில் அவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லுதல்) பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிற சில ஐ.டி கம்பெனிகளில் நடத்தப்பட்ட அந்த ரகசிய புலனாய்வில்தான் மேற்கூறிய உண்மை வெளிப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 24 (சிறிய அளவில் மட்டுமே அறியப்பட்ட) ஐ.டி கம்பெனிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கோப்ராபோஸ்டின் இணை ஆசிரியர் சையத் மஸ்ரூர் ஹசன் இந்த ஆய்வை மேற்கொள்கிறார். மேற்சொன்ன அந்த 2 டசன் கம்பெனிகளையும் அணுகி இப்படிச் சொல்கிறார்: எங்கள் தலைவர் நேதாஜி வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். அவருக்காகச் சமூக ஊடகங்களில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்க வேண்டும். அதேசமயம் அவரது அரசியல் எதிரிகளின் நன்மதிப்பைக் குலைத்து அவர்கள்குறித்த ஒரு எதிர்மறைப் பிரச்சாரத்தையும் செய்ய வேண்டும்.
இப்போது அந்த எல்லாக் கம்பெனிகளும் சையத்திற்கு தங்களால் எப்படியெல்லாம் ”உதவ முடியும்” என்பதைப் பட்டியலிட்டன. அவை: பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போலிக் கணக்குகளை உருவாக்கி அதன்மூலம் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் சமூக ஊடகங்களில் ஒரு மாய ஆதரவு அலையை உருவாக்க முடியும். அதாவது எங்களின் போலிக்கணக்காளர்கள் மூலம் பிரபலப்படுத்தவேண்டிய அரசியல்வாதியின் பக்கத்திற்குச் சென்று அவரது ஸ்டேட்டஸ்களை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் லைக் செய்வது, ஷேர் செய்வது, ரீடிவிட் செய்வது, கணக்கைப் பின்தொடர்வது எனத் தங்களால் ஒரு தலைவரைப் பெரிய பிரபலம் ஆக்க முடியும். மேலும் அத்தலைவர் மீது எந்த விமர்சனக்கறையும் படிந்துவிடாதபடி அவரது பக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்து அவரது ஸ்டேட்டஸ்களில் அவருக்கு எதிரான கமெண்டுகள் பதியப்பட்டால் உடனடியாக அதை நீக்குவது. அவரது எதிரிகள்மீது ஒரு எதிர்மறை பிம்பத்தைக் கட்டமைத்து அவர்களது நற்பெயரைக் குலைப்பது, . அப்புறம் யூடியுபில் ஒரு வீடியோவை வைரல் ஆக்குவது. எனப் பல்வேறு தளங்களிலும் செயல்பட முடியும்.
ஆக, வெகுமக்களின் கருத்துச்சுதந்திரத்திற்கான வெளியாகவும் உரையாடல் களமாகவும் அறியப்படுகிற சமூக ஊடகங்களை இவர்கள் இப்படியொரு வியாபாரப் பண்டமாக்குகிறார்கள். இதை இவர்கள் (ஐ.டி.கம்பெனியினர்) யாருக்காக வேண்டுமானாலும் செய்வார்கள். தன்னை அணுகி வியாபாரம் பேசுகிற எந்தக்கட்சிக்காகவும்தான் செய்வார்கள் என்றாலும் இதில் அதிகமாக அடிபடுவது பி.ஜே.பி மற்றும் மோடியின் பெயர்தான் என்று இந்த ஆய்வு சொல்கிறது. இப்படியான கம்பெனிகளில் மோடிக்காக இரவு பகலாகப் பலரும் உழைத்துக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இந்தத் திரைமறைவு வேலைகளெல்லாம் சட்டவிரோதமானவை. தகவல் தொழில்நுட்பச்சட்டம் 2000, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, வருமான வரிச்சட்டம் 1961 ஆகியவற்றை மீறுபவை; தண்டனைக்குரியவை. எனினும் தனது அரசியல் லாபத்திற்காக இப்படிச் சட்டத்தை மீறப் பி.ஜே.பி தயங்கவில்லை.
இன்னொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த வெறுப்புப் பிரச்சாரங்களும் அவற்றை வைரல் ஆக்குவதும் ஏதோ, அடிமட்ட அளவில் தலைமையின் கண்ணுக்குத் தெரியாத வகையில் நடைபெறுவது அல்ல. இப்படியான சட்டவிரோதச் செயல்களை ஒருவகையில் தலைமையின் ஒப்புதலோடு இவர்கள் செய்வதற்கு இரண்டு சாட்சிகளைச் சொல்ல முடியும். ஒன்று: மிகமோசமான, ஆபாசமான வார்த்தைகளால் பெண்களை அவதூறு செய்வது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வன்முறையில் ஈடுபடுபவர்களின் ட்விட்டர் கணக்குகளைக்கூட பிரதமர் மோடி பின்தொடர்வதாகச் சாத்வி கோஸ்லா சொல்லியிருப்பது. மற்றொன்று: சமீபத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி மீது நடத்தப்பட்ட வாட்ஸ் ஆப் தாக்குதல். பி.ஜே.பி.யின் மீதான விமர்சனத்தை (சாத்வி கோஸ்லாவின் வாக்குமூலம்) தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததற்காக அக்கட்சியின் தொண்டர்கள் அவர்மீது மிகக் கீழ்த்தரமான ஆபாசத் தாக்குதலை நடத்தினர். ஒரு வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி அதில் ஜோதி அவர்களின் எண்ணையும் இணைத்து ஆபாச மொழிகளால் அவரைத் தாக்கி மெசேஜ்களை அனுப்பினர். இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் செய்ததோடு பி.ஜே.பியின் மோடி, அமித் ஷா, தமிழிசை சவுந்தராஜன் ஆகிய தலைவர்களுக்கும் கடிதத்தின் மூலம் தெரிவித்தார். தாக்குதல் தொடுத்தவர்கள் ரொம்பவும் வெளிப்படையாக இதைச் செய்திருக்கிறபோதும் கட்சி மேலிடம் அவர்கள்மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இனி இப்படியான தரக்குறைவான தாக்குதலில் யாரும் ஈடுபடக் கூடாது என எச்சரித்ததாகவும் தெரியவில்லை.
ஆக, தங்களின் அபாரமான தேர்தல் வெற்றிக்குப் பின் யார் என்ன செய்துவிட முடியும் (அ) யாரையும் என்னவும் செய்துவிட முடியும் என்கிற ரீதியில் சமூக ஊடகங்களில் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதே சமூக ஊடகங்களைத் தேர்தல் வெற்றிக்கு முன் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர்கள் எப்படியெல்லாம் திட்டமிட்டுப் பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட முடியாது.
தேர்தல் பிரச்சாரத்தின் மிகமுக்கியக் களமாகச் சமூக ஊடகங்கள் மாறிப்போனது 2014 நாடாளுமன்றத் தேர்தலில்தான். அதிலும் இவ்வூடகத்தின் மூலைமுடுக்கைக்கூட விட்டுவைக்காமல் மொத்தமாக ஆக்ரமித்த ஒரே தலைவராக மோடிதான் இருந்தார். ட்விட்டரில் மிக அதிகமான நபர்களால் பின்தொடரப்பட்ட அரசியல் தலைவராக மோடி அறியப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்தவர்கள் 8.59 மில்லியன் பேர். முகநூலில் 26 மில்லியன் லைக்குகள் அவர் பக்கத்தில் விழுந்தன. (இந்த எண்ணிக்கைகளின் அரசியலைத்தான் சுவாதி அம்பலப்படுத்தி இருக்கிறார்). யூ டியுப் மற்றும் கூகுள் பிளஸ்ஸில் தனது கணக்கைத் தொடங்கிய முதல் அரசியல் தலைவரும் மோடிதான்.
இங்கு மோடிக்குப் போட்டியாக இருந்த ஒரு அரசியல்வாதியைச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்தான். இருந்தாலும் மோடியிடம் இருந்ததைப் போன்ற ஒரு அசாதாரணமான டீம் கெஜ்ரிவாலிடம் இல்லாமல் போனது. வேறு எந்தத் தலைவரிடமுமே கூட இல்லாமல் போனதுதான் மோடியின் வெற்றியை இங்கே தீர்மானித்தது. அந்த டீமின் முக்கியப் புள்ளிகளாக (2014 தேர்தல் சமயத்தின்போது) மூன்று பேரைச் சொல்கிறார்கள்.
1.ஹிரென் ஜோஷி. மோடியின் குஜராத் அரசில் உயர் பதவியில் இருந்தவர். மோடியின் வலைப்பக்கம், இணையதளம், ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் ஆகியவற்றையெல்லாம் நிர்வகித்தவர் இவர்தான். தேர்தலுக்காகப் பல புதுமையான எண்ணங்களை நடைமுறைப்படுத்தினார். மோடியின் ட்வீட்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தார். மோடியின் இணையதளத்தை ஹிந்தியிலும் சமஸ்கிருதத்திலும் தொடங்கினார்.
2.அரவிந்த் குப்தா. ஐஐடியில் படித்து முடித்த வெளிநாடுவாழ் இந்தியர். 2013 ஆம் ஆண்டு பி.ஜே.பி.யின் தலைமையகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக NDOC (National Digital Operation Centre)ஐ தொடங்கியது இவர்தான். மோடியை பொதுமக்களுடன் தொடர்புகொள்ள வைப்பதற்கான Mission 272+ இணையப் பக்கத்தையும் இவர் உருவாக்கினார். மோடியின் தேர்தல் உரைகள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ் ஆப், ட்விட்டர், பேஸ்புக், யூ டியுப் ஆகியவற்றில் எல்லாம் தீயாகப் பரவச் செய்தவர் இவர்தான்.
3.ராஜேஷ் ஜெயின். இணைய தொழில்முனைவோர். லட்சக்கணக்கான இளைஞர்களிடம் மோடியைக் கொண்டு சேர்த்த வாக்காளர் அட்டை பதிவுசெய்தல் பிரச்சாரம், NaMo தன்னார்வலர் நிகழ்வுகள் ஆகியவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர். மோடிக்கான ஆதரவைப் பரவலாக்கிய India272.comஐ தொடங்கியவர். தன் சொந்தக்காசைக்கூட போட்டு மோடிக்காக “NitiCentral” இணையதளத்தை அவர் தொடங்கினார். தற்போது அந்த இணையதளம் நிறுத்தப்பட்டுவிட்டது. ஏன் திடீரெனச் செயலிழந்து போனது என்று கேட்டபோது இவர்கள் சொன்னார்கள். : அந்த இணையதளம் அதன் குறிக்கோளை அடைந்துவிட்டது. அதாவது மோடி 2014 தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டார்.
பி ஜே பி இப்படிச் சமூக ஊடகத்தின் மூலம் திட்டமிட்டு தேர்தல் வெற்றியை அடைந்தவர்கள்தான் இன்று அதே ஊடகத்தில் திட்டமிட்டு அவதூறுப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு இதுவொன்றும் புதிதல்ல. “கம்யூட்டர் சிப்ஸ் வேண்டும்; உருளைக்கிழங்கு சிப்ஸ் வேண்டாம்” என்று தொண்ணூறுகளிலேயே முழங்கிய இவர்கள், இணைய உலகமொன்று புதிதாக உருவானபோது அதன் ஒரு அங்கமாகிப்போனார்கள். அதுமுதலே தங்கள் பேச்சு, எழுத்து மற்றும் அவதூறுப் பிரச்சாரங்களை இணையத்தில் உலவவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அநேகமாக இவர்களால் அதிக அளவில் அவதூறு செய்யப்பட்ட முதல் நபர் நேருவாகத்தான் இருப்பார். ஊடகவியலாளர் அமுல்யா கோபாலகிருஷ்ணன் இணையத்தில் நேரு எப்படியெல்லாம் அவதூறு செய்யப்படுகிறார் என்பதைத் தொகுத்திருந்தார். அவற்றில் சில: நேரு அலகாபாத்தில் வேசிகளின் இல்லத்தில் பிறந்தவர். ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கி அப்பெண் இந்தியாவை விட்டு விரட்டப்பட காரணமானவர். பாலியல் நோயால் தாக்கப்பட்டு இறந்தவர். அமிதாப்பச்சன் அவருடைய மகன்தான்.
இறுதியாகச் சொல்வதென்றால், சமூக ஊடகங்களை இப்படி எல்லாத் திசைகளிலும் சென்று கையகப்படுத்தியதன் மூலம் எதிர்காலத் தலைமுறையை நோக்கியும் இவர்கள் பாசிசத்தை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த ஊடக வலிமையை எதிர்த்து நிற்கும் பலம் பாசிச எதிர்ப்புச் சக்திகளிடம் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. இனி, பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் என எந்த ஒன்றிலும் நாம் பார்க்கும் அரசியல் பதிவுகள் எதேச்சையான தனிநபரின் கருத்து மட்டுல்ல என்ற விழிப்புணர்வு நம் ஒவ்வொருவருக்கும் தேவை.
 
Thanks By Ippothu.com 

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (1) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (1) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left