காவல்துறை பணியில் எத்தனையோ உயரதிகாரிகளுடன் எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மிகப்பெரிய துன்பத்தை எனக்கு அளித்தாலும் , அதன் பயனாக காவலர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய இறைவன் வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி செலுத்துகிறேன்…..
கோயமுத்தூரில் நான் பணியாற்றிய போது ஒரு பெண் காவலரின் மீதான விசாரணை எனக்கு வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து அந்தப் பெண் காவலரை பணி நீக்கம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. மன நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவலர் மிகவும் ஏழ்மையானவர். காவல் பணியும் பறிபோய்விட்டது , மன நலமும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப்பெண்ணை அவருடைய பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதால் , பல இடங்களில் கூலி வேலை செய்து வாழ்ந்திருக்கிறார் .
இதை கேள்விப்பட்ட சில மகளிர் அமைப்புகள் அந்தப் பெண்ணின் மறு வாழ்வுக்காக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த காரணத்தால் , அந்தப் பெண்ணின் வழக்கை மறு விசாரணை செய்ய ஆணை வழங்கியதன் காரணமாக , விசாரணை அதிகாரியாக என்னை நியமித்து உத்தரவிட்டார் எனது உயரதிகாரி .
ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் . விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகள் மொத்தம் 38 பேர்கள் . எனது விசாரணையை துவங்கிய போது தான் அந்தப் பெண் காவலரை பார்த்தேன் . மிகவும் அழுக்கடைந்த ஆடைகள் , தனக்கு மிகப்பெரிய அளவில் அநீதி இழைத்து விட்டார்கள் என்ற மன உளைச்சல் , அதன் பயனாக சொன்னதையே திருப்பி த் திருப்பி சொல்லும் அந்தப் பெண் நிச்சயமாக தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தோடு , சாட்சிகள் இருந்த இடங்களுக்கு அந்தப்பெண் காவலரையும் , அதற்கான ஆண் பெண் காவலர் குழுவினரையும் பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று நான் விசாரணை செய்தேன் . ஆனால் மறு விசாரணை செய்யப்பட்ட அனைத்து சாட்சிகளும் இந்தப் பெண் காவலர் செய்தது குற்றம் என்பதை சாட்சியங்களோடு நிரூபித்து வாக்கு மூலங்கள் அளித்தனர். பைத்தியக்கார பெண்ணை அழைத்துக் கொண்டு எதற்காக ஊர் ஊராக இந்த அதிகாரி அலைகிறார் என்ற ஏளனப் பேச்சுக்கள் ஒரு புறம் என்னை மிகவும் சோர்வடைய வைத்தது . மறு புறம் எனது உயரதிகாரி அவர்கள் இந்தப் பெண் செய்தது குற்றம் தான் ( proved ) என்று விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வற்புறுத்தினார்.
இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. இரவெல்லாம் அந்த விசாரணை அறிக்கையை படித்தேன் . அதன் பிறகு எனது மறு விசாரணை அறிக்கையை அளித்தேன் . எனது உயரதிகாரி அதை ஏற்க மறுத்து விட்டார். காரணம் , “விசாரணைப்படியும் சாட்சியங்களின் படியும் இந்தப் பெண் காவலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை . ஆனால் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தப் பெண் காவலர் செய்த குற்றத்திற்கு இவர் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது “, என்று எனது விசாரணையை முடித்திருந்தேன் .
நல்ல மன நலமுடையவர் , உடல் நலமுடையவர் என்று அரசு மருத்துவரால் சான்றளிக்கப்பட்ட பின்னர் தான் ஒருவர் காவல்துறையில் சேர முடியும் . அப்படி நல்ல மன நிலையில் காவல் பணியில் சேர்ந்த பெண்ணுக்கு , சில மோசமான அதிகாரிகள் கொடுத்த மன உளைச்சல் தான் அந்தப் பெண் காவலரை மன நல பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அதன் பிறகு அந்தப் பெண் காவலரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது உடனடியாக சென்னையில் உள்ள மன நல மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்து அங்கிருந்த மன நல மருத்துவர் சான்றிதழ் வழங்கியதோடு , சிகிச்சை முடியும் வரை அந்தப் பெண் காவலரை காவல் சம்மந்தப்பட்ட பணிக்கு அனுப்பக் கூடாது என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மன நல மருத்துவரின் பரிந்துரைப்படி செய்யாமல் , அந்தப் பெண் காவலரை காவல் பணிக்கு நியமித்திருக்கிறார்கள் அப்போதைய சில அதிகாரிகள் . அந்த நிலையில் தான் அந்தப் பெண் காவலர் அந்தக் குற்றத்தை செய்திருக்கிறார் . ஆகவே தன் நிலை மறந்த நிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அந்தப் பெண் காவலர் பொறுப்பாக மாட்டார் . ஆகவே இதில் இவரது தவறு ஏதுமில்லை என்ற எனது அறிக்கை தூக்கி தூர எறியப்பட்டது . நிறைய அதிகாரிகள் எனக்கு அறிவுரை வழங்கினார்கள் , யாரோ ஒரு பெண்ணுக்காக இந்த உயரதிகாரியை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று …. உயரதிகாரியை நான் மிகவும் மதிக்கிறேன் ..ஆனால் ஒரு அப்பாவி பெண் காவலருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது , ஆகவே எந்தக் காரணத்தைக் கொண்டும் எனது விசாரணை அறிக்கையை மாற்றித்தர முடியாது என்று திடமாக கூறி விட்டேன் . எத்தனையோ நெருக்கடிகளை இதனால் நான் சந்தித்தேன் . பிறகு வேறு வழியின்றி எனது விசாரணை அறிக்கை ஏற்கப்பட்டது .
நான் மறு விசாரணை அறிக்கை சமர்ப்பித்த ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாள் எனது அலுவலகத்திற்கு அந்தப் பெண் காவலர் வந்தார் , தன்னை மீண்டும் பணியில் சேர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று கூறி ஆனந்தத்தால் கதறியழுதார். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறி அனுப்பினேன் . 15 வருட ஊதியம் மற்றும் பிற பணப்பயன்களோடு ஒரு மிகப்பெரிய தொகை அரசாங்கத்தால் அந்தப் பெண் காவலருக்கு வழங்கப்பட்டது . தற்போது நல்ல மன நிலையோடு தலைமைக் காவலராக அந்தப் பெண் நல்ல முறையில் பணியாற்றி வருவதாகக் கேள்விப்பட்டேன் . இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.
மற்றவர்களுக்கு உதவி செய்ய இறைவன் நமக்கு வாய்ப்பளிக்கிறார் . இதில் எனது முயற்சி என்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை . நமது கடமையை சரியாக செய்வதற்குத்தான் அரசாங்கம் ஊதியமும் பல சலுகைகளும் வழங்குகிறது . என்ன நேர்ந்தாலும் , நியாயத்தை நிலை நாட்ட தவறக்கூடாது என்பதே காவல் துறை அதிகாரிகளின் எண்ணமாக செயலாக இருக்க வேண்டும் …… ஆனால் அந்த உயரதிகாரி எனக்கு நிரந்தர பகையாளியானது எனது பெரிய வருத்தம் …..
இந்த வலைப்பதிவில் தேடு
விசாரணை செய்ய ஆணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விசாரணை செய்ய ஆணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடமையை சரியாக செய்வதற்குத்தான் அரசாங்கம் ஊதியமும் பல சலுகைகளும் வழங்குகிறது
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO