காஷ்மீர் வியாபாரிகளை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர்
காஷ்மீர் வியாபாரிகளை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர் உத்தரபிரதேச மாநிலத்தில் தெருவோரத்தில் பழங்களை விற்றுக்கொண்டிருந்த காஷ்மீர் வியாபாரிகளை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை லக்னோ போலீஸ் கைது செய்தது.
புல்மாவா தாக்குதலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் காஷ்மீர் மாணவ- மாணவிகள் தாக்கப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தில் பல மாணவ – மாணவிகள் குருத்வராக்களில் தஞ்சமடைந்தனர். நாட்டின் பிற பகுதிகளில் வாழும் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தெருவோரத்தில் பழங்களை விற்றுக்கொண்டிருந்த காஷ்மீரைச் சேர்ந்த மூன்று வியாபாரிகளை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கினர். இது குறித்து போலீஸுக்குத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் காஷ்மீர் வியாபாரிகளை மீட்டனர். இந்து அமைப்பினர் காவி உடை அணிந்துகொண்டு வியாபாரிகளைத் தாக்குவது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. நேற்று இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட விஷ்வ இந்து தல் அமைப்பினைச் சேர்ந்த பஜ்ரங் சோன்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மக்கள் மீது காட்டும் விரோதத்துக்கு இந்த வீடியோவே சாட்சி என்றும் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
லக்னோ தொகுதியிலிருந்து ராஜ்நாத்சிங் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது