ஜம்மு காஷ்மீர் குடியரசுத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அதன் சட்ட சிறப்பம்சங்களை நீக்கி யூனியன் பிரதேசமாக மாற்றி, குடியரசுத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது ஆளும் பாஜக நடுவண் அரசு.
இதற்காக சொன்ன காரணங்கள், ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் ஒரு பயங்கரவாதத் தளமாகக் பயன்படுத்திக் கொண்டு இந்தியா மீது போர் தொடுத்துக் கொண்டே இருந்தது. அந்த பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியக் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்பதுதான்.
இது வெறுமனே மேலோட்டமாகப் பார்த்தால்…ஆமாம்ல, உண்மைதானே என்றே எண்ணத் தோன்றும்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது இந்திய ஒன்றியத்தோடு இறுதியாக இணைந்த ஒரு மாநிலம். இந்தியாவோடு இணைய ஒப்புதல் அளித்து அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் மிக முக்கியமானது, ஜம்மு காஷ்மீர் மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்கள் அசையாச் சொத்துக்களை அங்கே வாங்கக் கூடாது என்பதே.
இதை ஒப்புக்கொண்டே நடுவண் அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு இணைத்தது. அந்த ஒப்பந்தத்தின் சான்றுகளே சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ.
இன்று, நடுவண் அரசு அந்தச் சட்டப்பிரிவுகளை நீக்கியது என்பது, முதலில் தான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையே நடுவண் அரசு தற்போது கிழித்தெறிந்துள்ளது என்பதே உண்மை.
அதாவது நம்பிக்கையோடு இந்தியாவுடன் தங்களை ஒப்படைத்துக் கொண்ட ஒரு மாநிலத்தையும், அதன் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, தனதாக்கிக் கொண்டுள்ளது நடுவண் அரசு. இது அப்பட்டமான ஒப்பந்த மீறல்.
சரி…பாகிஸ்தான் பயங்கரவாதம்?
ஜம்மு காஷ்மீர் என்பதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர். அடுத்தது, இந்திய எல்லையில் உள்ள தனி மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர்.
பாகிஸ்தான், தன் பயங்கரவாத முகாம்களை இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில் வைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டை வைத்த இந்திய நடுவண் அரசுகள், அங்கே மக்களை பயங்கரவாதத்திற்கு எதிராக உருவாக்குவதற்குப் பதிலாக மக்களைத் தொடர்ந்து வாட்டி வதைத்ததுடன், இந்திய நடுவண் அரசு மீதான வெறுப்புணர்வையே தொடர்ந்து வளர்த்தெடுத்தன. சோதனைகள் என்கிற பேரிலும், பயங்கரவாத ஒழிப்பு என்கிற பேரிலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் முழு வெறுப்புக்கும் ஆளானது இந்திய நடுவண் அரசு.
எந்த ஒரு சாதாரண மக்களும் பயங்கரவாதத்தை விரும்பியதாக வரலாறு கிடையாது. பயங்கரவாதிகளிடம் இருந்து தங்களைக் காக்கும் ராணுவத்தை கடவுளர்களாக எண்ணுபவர்களே அவர்கள்.
ஆனால், இந்திய ராணுவத்தைக் கண்டாலே ஒவ்வொரு ஜம்மு காஷ்மீரியும் எதிரியைக் காண்பதைப்போல உணர்வுக்கு ஆளானதற்கு யார் காரணம்?
தமிழ் ஈழத்தில், அமைதி காக்கப்போகிறோம் என அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை மூன்றே மூன்று ஆண்டுகளில் எப்படி தமிழ் ஈழ மக்களிடையே, உலகத்தமிழர்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தோ, அதைவிடப் பலமடங்கு சுமார் 70 ஆண்டுகளாக, ஜம்மு காஷ்மீரில் மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கிறது இந்திய ராணுவமும், நடுவண் அரசும்.
ஜம்மு காஷ்மீரில் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள், பயங்கரவாதிகளுக்குத் துணை போனவர்கள் என்று சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள் என எண்ணிலடங்காத் துன்பங்களை அனுபவித்த மக்களே அங்கே, பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு ஆளாகியதற்கு காரணம் நமது நடுவண் அரசுகள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
அதேபோல, தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற சிறப்பு சட்டப்பிரிவுச் சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதும் ஜம்மு காஷ்மீர் அரசின், ஆட்சியாளர்களின், அரசியல் தலைவர்களின் தவறு.
சரி, யூனியன் பிரதேசமாகிவிட்டதால் தற்போது இந்திய ஆளுகைக்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் உருவாகாமல் தடுத்துவிடலாம், ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறது நடுவண் அரசு?
பாகிஸ்தான் எல்லை என்பது ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல, குஜராத்திலும்கூட உள்ளது.
பயங்கரவாத ஊடுருவல் என்பது ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக மட்டுமல்ல இந்தியாவின் எந்த எல்லையில் இருந்தும் வர இயலாமல் நமது பாதுகாப்புப் படைகளால் தடுக்கப்படும்போது அது ஏன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இயலவில்லை?
Surgical Strike, Air Strike அடித்துப் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்று துவம்சம் செய்யும் நமது இந்திய அரசுக்கு…ஒரு சிறு மாநிலத்தில் மக்களிடையே ஊடுருவும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்துக் களையெடுப்பது என்ன அவ்வளவு கடினமானதா? அதுவும் 70 ஆண்டுகளாக???
இத்தனைக்கும் ஜம்மு காஷ்மீரின் மொத்த மக்கள் தொகையே வெறும் ஒன்னேகால் கோடிதான்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 130 கோடி.
எனவே, ஜம்மு காஷ்மீரில் பாஜக நடுவண் அரசுக்குப் பிரச்சனை, பயங்கரவாதம் மட்டுமே அல்ல.
- விஷ்வா விஸ்வநாத்
#JammuAndKashmir
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக